பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

கெடிலக்கரை நாகரிகம்


பக்கம் செல்லும் மாநில (State Highways) நெடுஞ்சாலையும், மாவட்ட (Major District Road) நெடும்பாதையும் பண்ணுருட்டி வழியாகவே செல்கின்றன. பண்ணுருட்டியிலிருந்து தெற்கே நெய்வேலிப் பக்கம் ஒரு மாவட்ட நெடும்பாதையும், வடக்கே விக்கிரவாண்டி பக்கம் ஒரு மாவட்டக் குறும்பாதையும் செல்கின்றன. விழுப்புரம் - கடலூர்ப் புகைவண்டிப் பாதையும் பண்ணுருட்டி வழியாகத்தான் செல்கிறது; பண்ணுருட்டியில் புகைவண்டி நிலையம் உண்டு. இவ்வகையில் பண்ணுருட்டி போக்குவரவு நெருக்கடியுள்ள ஒரு நகரமாகும். தொழில் வாணிகச் சிறப்பேயன்றித் திருவதிகை மிக அண்மையில் இருப்பதும் இவ்வூருக்குத் தனிப் பெருமையாகும். பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராகிய பண்ணுருட்டியின் மக்கள் தொகை: 28,760. இவ்வூர் இப்போது நகராட்சியாகியுள்ளது.

பண் உருட்டி இசைபாடும் பாணர்கள் வாழ்ந்த ஊர் ஆதலின் பண்ணுருட்டி என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

செங்கல் சூளை, மண்பாண்டத் தொழில், பொம்மைகள் செய்தல், இசைக் கருவியாகிய கடம் செய்தல், பாக்குகளுக்குச் சாயம் ஏற்றுதல், ஆலைகளில் மணிலா எண்ணெய் ஆடுதல், முந்திரி எண்ணெய் ஆடுதல் முதலிய தொழில்களுக்குப் பண்ணுருட்டி பேர்போனது. மற்றும், முந்திரி, பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றிற்கும் பண்ணுருட்டி பேர்போனது. பண்ணுருட்டிக்குப் பக்கத்தில் காடாம்புலியூர்ப் பகுதியில் கிடைக்கும் வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரம் அனுப்பப்படுகிறது.

பண்ணுருட்டி ஒரு தொழில் நிலையமாயிருப்பதையொட்டி ஒரு பெரிய வணிக நிலையமாகவும் விளங்குகிறது. வியாழன் தோறும் இங்கே பெரிய சந்தை கூடுகிறது. பாக்கு, புகையிலை, முந்திரிக் கொட்டை, வெல்லம் முதலியவற்றின் வாணிகம் இங்கே மிகுதி. பண்ணுருட்டிப் பலாப் பழமும் பண்ணுருட்டித் தலையாட்டிப் பொம்மையும் நாடறிந்தவை.

இத்துணை, தொழில் - வாணிக வளமுடைய பண்ணுருட்டியில் உயர்நிலைப் பள்ளி, தொழிற் பள்ளி, சிறு நீதிமன்றம், சிறைச்சாலை, துணைத் தாசில்தார் அலுவலகம் முதலியனவும் உள்ளன. நெய்வேலி நிலக்கரிப் பகுதி பண்ணுருட்டியை நெருங்கி வந்து கொண்டிருப்பதால் முன்னிலும் இவ்வூர் இப்போது மிகவும் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. இவ்வூர்க்கு அருகே கெடிலத்தில் பாலம் கட்டியிருப்பது நெய்வேலித் திட்டத்திற்கு மிகவும் உதவியாயிருக்கிறது.