பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

கெடிலக்கரை நாகரிகம்



செய்யப்பட்ட மூன்றாம் இராசராசச் சோழனுக்குப் பரிந்துகொண்டு திருவதிகை முதலிய இடங்களைக் கடுமையாய்த் தாக்கி அழித்ததாகத் திருவயிந்திரபுரத்திலுள்ள கல்வெட்டொன்று கூறும் செய்தி ஈண்டு நினைவு கூரத்தக்கது. இப்படி இன்னும் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அழிந்துபோன கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் புதுப்பித்தோ - திருத்தியோ கட்டியிருக்கலாம்; அதனால், அவரது உருவச் சிற்பம் அக் கோபுர வாயிலில் இடம் பெற்றிருக்கலாம். இந்த வெளிக் கோபுரத்தின் கிழக்குப் புறத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இந்த முதல் கோபுரம் போலவே இரண்டாவது கோபுரமும் சுந்தர பாண்டியன் காலத்திற்கு முன்னமேயே கட்டப்பட்டிருக்க, சுந்தர பாண்டியன் தன் காலத்தில் அதனைப் புதுப்பித்தோ திருத்தியோ கட்டியிருக்கலாம். இரண்டு கோபுரமுமே பாண்டியப் பேரரசாலோ அல்லது அவர்கட்கு முன் ஆண்ட சோழப் பேரரசாலோ அல்லது அவர்கட்கும் முன் ஆண்ட பல்லவப் பேரரசாலோ கட்டப்பட்டும் இருக்கலாம்; பின்னால் - பின்னால் வந்தவர்கள் திருத்தியும் புதுப்பித்தும் திருப்பணிகள் செய்து தங்கள் நினைவுக் குறியை நிறுத்திச் சென்றிருக்கலாம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டதாகக் கருதப்படும் இரண்டாம் கோபுர வாயிலில், கி.பி. 730 - 731ஆம் ஆண்டில் அரசாண்ட இரண்டாம் பரமேசுரவர்மப் பல்லவ மன்னனின் கல்வெட்டு இருக்கிறதென்றால் பார்த்துக்