பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

325


காலத்தில் ஒருநாள் யானை கொண்டுவரப்பட்டு இந்தச் சமண மன்னனது சிலையை மோதுவதுபோல் ஒரு காட்சி (ஐதீகம்) நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிலை, ஊருக்கருகில் நிலத்தின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

குணபரேச்சரம்

திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலுக்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், மாநில நெடுஞ்சாலையிலிருந்து புறப்படும் ஒரு சிறு குறுக்குப் பாதை மாவட்ட நெடும் பாதையுடன் வந்து சேருமிடத்தில் குணபரேச்சரம் என்னும் கோயில் இருக்கிறது. இது, குணபர வீச்சரம், குணபரேசுரம், குணதரேச்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மகேந்திர வர்ம பல்லவனுக்குக் குணபரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு அந்தக் குணபரனால் கட்டப்பட்டதால் குணபரேச்சரம் என்னும் பெயர் பெற்றது. இது. இது தொடர்பான ஒரு சிறு ஆராய்ச்சியை இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் ‘திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். பல்லவன் அப்பரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பின், பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் பெரிய புராணம் கூறுகிறது.

குணபரேச்சரம் மிகச் சிறியது; திருவதிகையில் இருக்கு மிடம் தெரியாமல் இருக்கிறது. இடிந்துபோன ஒரு சிறு வீடு போல் இருக்கிறது என்று சொல்ல மனம் வராவிடினும், சிதைந்துபோன ஒரு சிறு ஐயனார் கோயில் போல் இருக்கிறது என்று சொல்லலாம். கிழக்கு நோக்கிய கோயிலின் முன்பகுதியில், ஒரு வீட்டுத் தோட்டத்தில் இருப்பதுபோல் மரஞ்செடி கொடிகள் காணப்படுகின்றன. அவற்றைக் கடந்து உள்ளே போனால் இடிந்து பாழடைந்துள்ள மண்டபப் பகுதிகளில் பிள்ளையார், திருமால், நந்தி, சூரியன் முதலியோரின் சிலைகள் உள்ளன. ஒரு சுவரின் அடியில் மாடக்குழிபோல் உள்ள ஒரு பதிவில் தெற்கு நோக்கியிருக்கும் அம்மன் சிலை பார்ப்பதற்கு மிகவும் இரங்கத்தக்கதாயிருக்கிறது. கருவறையிலிருக்கும் இலிங்கம், வீரட்டானேசுரர் கோயிலில் உள்ள இலிங்கம் போலவே பதினாறு பட்டைகள் கொண்டதாய்க் காண்பதற்குக் கவர்ச்சியாய்க் களிப்பூட்டுகிறது. இலிங்கத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்: