பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

கெடிலக்கரை நாகரிகம்


குணபரேச்சரத்தில் ஆதி சைவ அந்தணக் குருக்கள் பூசனை புரியவில்லை; ஐயனார் கோயில் போல் - காளி கோயில் போல் பூசாரியாரே பூசனை புரிகிறார். பூசாரியார் திருநீறு வைத்துச் சூடம் கொளுத்தும் பித்தளைத் தட்டில் ‘குணதர ஈசன் என்னும் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறதே தவிர ‘குணபர ஈசன்’ என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால், சேக்கிழார் பெரிய புராணத்தில் ‘குணபர வீச்சரம்’ என்றே பெயர் கூறியுள்ளார். குணபர ஈச்சரம் = குணபரேச்சரம் என்றாகும். கோயில் தட்டில் உள்ள பெயரைக் கொண்டு பார்த்தால் ‘குணதரேச்சரம்’ என்றே பெயர் சொல்ல வேண்டும். எனவே, குணபரேச்சரம், குணதரேச்சரம் என்னும் இரண்டு பெயர்களும் அக்கோயிலுக்கு வழங்கப்பட்டன எனக் கொள்ள வேண்டும்.

குணபரேச்சரம் போற்றுவாரற்று இடிந்து பாழடைந்ததற்குக் காரணம் என்ன? அண்மையில் பெரும் புகழுடைய வீரட்டநாதர் கோயில் இருப்பதால், குணபரேச்சரம் மக்களிடையே எடுபடாமல் போயிருக்கலாம்; மற்றும், சமணக் கோயிலை இடித்துக்கொண்டு வந்து அந்தக் கோயிற் பொருள்களைக் கொண்டு இது கட்டப்பட்டதாதலின், இந்தக் கோயிலைச் சமண் கோயிலின் மாற்றுருவம் எனக் கொண்டு இங்கே சமண் வாடை வீசுவதாக எண்ணி மக்கள் புறக்கணித்திருக்கலாம்; மேலும், சமணக் கடவுள் சினந்து ஏதாவது பண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலும் மக்கள் இந்தப் பக்கம் தலைகாட்டாது