பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

329


மலையமானாடு மலாடு எனவும் புதுச்சேரி புதுவை எனவும் மருவிச் சுருங்கியது போல, அதியரை மங்கை அதிகை என மருவிச் சுருங்கியும் இருக்கலாம்.

இன்று ஒரு சிற்றூராகத் தோற்றமளிக்கும் திருவதிகை பண்டு ஒரு பெரிய நகராகத் திகழ்ந்தது. பல காலங்களில் - பல ஆட்சிகளில் இவ்வூர் ‘திருவதிகை நாடு’ என்னும் சிறு பகுதிக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. பல்லவர் - சோழர் முதலியோர் காலங்களில் மட்டுமன்று; விசய நகரப் பேரரசர் காலத்திலும் - அஃதாவது பதினேழாவது நூற்றாண்டு வரையிலுங் கூடத் திருவதிகைக்குத் தலைநகர்த் தகுதி இருந்தது. அதனால்தான் சயங்கொண்டார் என்னும் புலவர் பெருமான் தமது கலிங்கத்துப் பரணி என்னும் நூலில் ‘அதிகை மாநகர்’ எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். அவர் திருவதிகையை மாநகர் என்று கூறியுள்ள சூழ்நிலையை ஆராயின் திருவதிகையின் சிறப்பு இன்னும் நன்கு விளங்கும்.

முதற் குலோத்துங்கன் ஒரு சமயம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் தன் பெரும் படைகளுடன் சென்று கொண்டிருந்தான். இந்தப் பயணத்தில்தான் அவன் படைகள் கலிங்கத்தை வெற்றி கொண்டன, குலோத்துங்கன் தில்லையைக் கடந்து காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருவதிகையில் தன் படைகளைத் தங்கவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டான் என்று புலவர் பாடியுள்ளார்:

[1]"தென்றிசையினின்றுவட திக்கின் முகம் வைத்தருளி
முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டு விடை கொண்டதிகை
மாநகருள் விட்ட ருளியே"
"விட்ட அதி கைப்பதியி னின்றுபய ணம்பயணம்
விட்டுவிளை யாடி யபயன்
வட்டமதி யொத்த குடை மன்னர் தொழ நண்ணினன்
வளங்கெழுவு கச்சி நகரே"

என்பன பாடல்கள். குலோத்துங்கன் அதிகை மாநகருள் படைகளை விட்டிருந்தானாம். படைகளை விட்டிருக்கும் இடம் படைவீடு அல்லது பாடிவீடு எனப்படும். ஒரு பேரரசன் படைகளைத் தங்க விடுவதென்றால் அவ்வூரில் எத்துணையோ வசதிகள் இருக்கவேண்டும். வீரர்களும் யானைகளும்


  1. கலிங்கத்துப் பரணி - அவதாரம் - 68, 69.