பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

335


இருந்தது. ஆர்க்காடு நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில் 1762 ஆம் ஆண்டு முகமது அலியால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ‘மிட்டா’வாக அளிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கே ஒரு பேராளரை (பிரதிநிதியை) இருத்தித் தொழிற்சாலையும் நிறுவித் துணி வாணிகத்திற்கு வழி செய்தனர். இன்றும் இங்கே நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. 1807இல் இப் பகுதி அப்பு முதலியார் என்பவர்க்குக் கம்பெனியாரால் குத்தகைக்கு விடப்பட்டது; அவர் 1809இல் சங்கர நாயக்கர் என்பவருக்கு மாற்றினார். நாடு உரிமைபெறும் வரையும் இப் பகுதி சங்கர நாயக்கர் மரபினரின் பாளையப் பட்டாகவே இருந்து வந்தது. ஆவணப் பதிவுகளிலும் ‘மிட்டா கிராமம்’ என்றே குறிக்கப்பட்டு வந்தது. பாளையக்காரர்கள் மாசி மகத்தன்று பல்லக்கில் கடலூர்க் கடற்கரைக்குச் செல்வது மரபாயிருந்தது.

பாளையம் பகுதியில் சொக்கநாதர் கோயிலும், நடுவீரப் பட்டுப் பகுதியில் கைலாசநாதர் கோயிலும் பச்சைக்கந்த தேசிகர் ஆதீனமடமும் உள்ளன. இப்போது ஆதீனம் மறைந்து விட்டது. நடுவீரப்பட்டில் ஐப்பசி சஷ்டியில் சூரசம்மார விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பாளையத்தின் தெற்கு எல்லையில் உயரமான குன்று ஒன்று உள்ளது. இது கேப்பர் மலைத் தொடர்ச்சியைச் சார்ந்திருப்பினும் தான் தனித்து உயர்ந்துள்ளது. இதன் உச்சிமேல் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இதற்கு ‘மலைப் பிள்ளையார் கோயில்’ என்பது பெயர். உச்சிக்குச் சென்று வரப் படிக்கட்டு வசதி உண்டு. மலையடிவாரத்தில் கிழக்குப் புறம் இரண்டு குளங்கள் உள்ளன. தைத்திங்கள் மூன்றாம் நாளாகிய கரிநாள் அன்று இம்மலைப் பிள்ளையார் கோயிலில் மிகச் சிறப்பான திருவிழா நடைபெறும். அன்று இறையுருவம் கீழே இறங்கி ஊருக்குள்ளே வலம் வரும். வடக்கே கெடிலமும் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைகளும் அமையப் பெற்றுள்ள மலைப் பிள்ளையார் கோயிலில் நின்றுகொண்டு, இனிய குளிர்ந்த காற்றை நுகர்ந்துகொண்டு சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் கிடைக்கக் கூடிய இன்பத்திற்கு அளவேது?

வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குச் சென்னப்ப நாயக்கன் பாளையத்தோடு மிகுந்த தொடர்பு சொல்லப்படுகிறது. வள்ளலார் இவ்வூர்க்கு அடிக்கடி வந்து தங்கியிருந் தார்களாம்; இவ்வூர் இறைமேல் பாடல்களும் பாடியிருக்கிறார்களாம். (என் தாயைப் பெற்ற பாட்டனார் ஊர் சென்னப்ப நாயக்கன் பாளையம் தான். என் தாய்ப் பாட்டனார் மருத்துவம் சபாபதி முதலியார் குடும்பத்திற்கு வள்ளலார் மிகவும்