பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

கெடிலக்கரை நாகரிகம்


முதலியவை பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. மற்றும், முட்டைக் கோசு, தக்காளிப் பழம், சப்போட்டா பழம் முதலியனவும் விளைத்துப் பார்க்கப்படுகின்றன. மாடு வளர்ப்பு - கோழி வளர்ப்பு பற்றிய முறைகளும் செயல் வாயிலாகக் கண்டறிந்து அறிவிக்கப்படுகின்றன. நெல் முதலிய தானிய விதைகள் உழவர்கட்கு அளிக்கப்படுகின்றன. உரம்போடும் முறையும் மற்ற மற்றப் பயிர் முறைகளும் ஆராய்ந்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த வகையில், கெடிலக்கரையின் பெருமையில் இந்தப் பண்ணைக்கும் பங்கு உண்டு.

பல்லவராய நத்தம்

இவ்வூர் பாலூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையை ஒட்டியுள்ளது. ஊரின் பெயர் பல்லவ மன்னரை நினைவுபடுத்துவதால், பல்லவர் காலத்தில் இவ்வூர் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்ற இடமாய் இருந்திருக்க வேண்டும். பாலூர்ப் பண்ணை பாலூருக்கு அருகில் இல்லை - இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளது; அதே போல், வானமாதேவி அணை வாணமாதேவிக்கு அருகிலில்லை. இவ்வூருக்கு அருகில்தான் உள்ளது; அப்படியிருந்தும் பண்ணையின் பெயரும் அணையின் பெயரும், அந்தோ, இந்த ‘அப்பாவி’ ஊருக்குக் கிடைக்கவில்லை. பொது மக்கள் சிலர் மட்டும், ‘பல்லவ ராயநத்தம் அணை - பல்லா நத்தம் அணை’ என இவ்வூரின் பெயரால் அணையை அழைக்கின்றனர். இது கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘ஏதோ கிடைத்த வரையிலும் இலாபம்’.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் கடலூருக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நெடுஞ்சாலை நெல்லிக் குப்பம் கடைத்தெரு வழியாகச் செல்கிறது. ஊருக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலம் ஓடுகிறது. இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது. விரைவுப் புகைவண்டிகள் (Express) இந் நிலையத்தில் நிற்பதைக் கொண்டு இதன் இன்றியமையாமை உணரலாம்.

நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர் நெல்லிக் குப்பமாகும். ஊர் மக்கள் தொகை 23,000. இவ்வூரில்