பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

351


செல்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவு ஓடி மீண்டும் கிழக்கு நோக்கி வளைந்து விடுகிறது.

கிழக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் வடக்கு நோக்கி திரும்புகிற முனையில் (ட) ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. இங்கே ஆறு தெற்கு - வடக்காக ஒடுகிறது. வடக்கு நோக்கியோடும் ஆற்றிற்கும் வடக்கு நோக்கியுள்ள மலைப் பிதுக்கத்திற்கும் நடுவே திருவயிந்திரபுரம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலிலிருந்து மலைக்குப் படிக்கட்டு மேல்நோக்கிச் செல்கிறது; கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து ஆற்றிற்குப் படிக்கட்டு கீழ் நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து, ஆற்றிற்கும் மலைக் குன்றுக்கும் நடுவே கோயில் நெருக்குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திர புரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணிரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும் இந்நூலில் ‘வரலாறு கண்ட திசை மாற்றம்’ என்னும் தலைப்பில் (பக்கம் : 48 - 50) காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்தத் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வநாயகப் பெருமாள்; தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் ‘திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன் அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.