பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலத்தின் தோற்றம்

35


மையனூர் ஏரி

கோடை நாளில் உள் ஊற்று வழியாகவும் மழை நாளில் உள் ஊற்று மேல் ஊற்று இரண்டன் வழியாகவும் சுனையிலிருந்து தண்ணிர் வடக்குச் சரிவை நோக்கி ஓடி, அப் பகுதிக்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஏரியில் கலக்கிறது. அந்த ஏரியிலிருந்து வாய்க்கால் வடிவத்தில் பிரிந்து செல்லும் நீரோட்டமே கெடிலம் ஆறு ஆகும்.

கெடிலத்தின் தோற்றமாகிய இவ்வேரி ‘மையனூர் ஏரி’ என ஊர்ப் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஏரி மையனூர் மலையின் வடபால் உள்ளது; கிழக்கு மேற்காக ஒன்றரை கி.மீ. நீளம் இருக்கும். ஏரி நிரம்பி வழியும் கோடி கிழக்கேதான் உள்ளது. அந்தக் கிழக்குக் கோடிதான் ஆற்றின் இரண்டாவது பிறப்பிடம். இங்கிருந்து சித்திரைக் கோடையிலும் சிறு ஊறல் நீர் சுரந்து சென்று கொண்டேயிருக்கிறது. இதனால்தான் கெடிலம் ஓர் ‘உயிர் ஆறு’ (சீவநதி) என்று சொல்லப்படுகிறது.

இரு பிறப்பு

பூணூல் அணிந்து கொண்டிருக்கும் அந்தணர்களை ‘இரு பிறப்பாளர்’ என்று சொல்வது மரபு. அவர்கள் அன்னை வயிற்றிலிருந்து பிறந்தது ஒரு பிறப்பாம்; பின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பூணுால் போட்டுக் கொள்வது மற்றொரு பிறப்பாம். அவர்கள் பூணுால் அணிந்த பின்னரே அந்தணர் என்னும் தகுதி பெறுகின்றனராம். அவர்களைப் போலவே கெடிலத்தையும் ‘இரு பிறப்பாறு’ என்று சொல்லலாம். அதன் முதல் பிறப்பு: கருடன் பாறையின் கீழ்பாலுள்ள சுனை, இரண்டாவது பிறப்பு: மையனூர் ஏரியின் கிழக்குக் கோடி. இவ்வகையில் கெடிலம் இருபிறப்பு உடையதாகிறது. இவ்வுண்மையறியாதார் சிலர் கெடிலத்தின் பிறப்பிடம் மையனுர் ஏரி என்றே சொல்லி முடிவு கட்டிவிடுகின்றனர்’ சிறு வகுப்புப் பாடநூல்கள் சிலவற்றில், ‘கெடிலம் கள்ளக் குறிச்சி வட்டத்தில் ஒர் ஏரியிலிருந்து தோன்றுகிறது’ என்றே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதிலும் உண்மையிருக்கிறதல்லவா?

‘நதி மூலமும் ரிஷி மூலமும்’

கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரி என்று சொல்பவர்கள், ஏரியுடன் நின்று விடாமல், அந்த ஏரிக்கு எங்கிருந்து தண்ணிர் வருகிறது என்பதையும் ஆராய வேண்டும். அண்மையில் சுனையுடன் கூடிய கருடன் பாறையை