பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

367


தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளன; அதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ எனப் பொது மக்கள் அழைப்பதுண்டு. கடலூரின் பெரிய கடைத் தெருவும் நகர்ப் புகை வண்டி நிலையமும் பேருந்து வண்டி (பஸ்) நிலையமும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் உள்ளன; பாடல் பெற்ற சிவன் கோயிலும் ஞானியார் மடமும் இங்கேதான் உள்ளன. எனவே, முதுநகர்ப் பகுதியைக் காட்டிலும் புதுநகர்ப் பகுதிகள்தாம் பொது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன.

கடலூர் என்னும் பெயரைப் போலவே முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டே எழுந்துள்ளது. துறைமுகத்தாலும் தொழில் வாணிகத்தாலும் வெளிநாட்டாரின் உள்ளங்களைக் கவர்ந்த பழைய நகரம் கூடலூர்தான் என்பது ஒரு புறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன; 1866 ஆம் ஆண்டிற்குப் பின்னரே புது நகராகிய மஞ்சக் குப்பம் பகுதிக்குச் சென்றன. மாவட்ட முதல்வரின் (கலெக்டரின்) அலுவலகங்கூட 1802 ஆம் ஆண்டு வரைக்கும் கூடலூரில்தான் இருந்தது; பின்னரே மஞ்சக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் தலைமையலுவலகங்கள் வைத்திருக்கும் கடலூர் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு கூடலூரில் தான் தொடங்கப் பெற்றது. இதைக் கொண்டு, தொடக்கத்தில் கூடலூர்தான் விரிவும் விளம்பரமும் பெற்றிருந்தது என அறியலாம். இதனால்தான், கடலூர் என்னும் பெயரும் முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டு எழுந்தன.

தொடக்கத்தில் கூடலூர் மையம் பெற்றிருந்ததற்குக் காரணம், அது துறைமுக நகரமாயிருந்ததுதான். பின்னர்ப் புதுநகர்ப் பகுதி உருவாகிப் பெருமை பெற்றதற்குக் காரணம், ஆங்கிலேயர்கள் புதுநகர்ப் பகுதியில் செயின்ட் டேவிட் கோட்டை கட்டி அதைத் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்தமைதான்! இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டே மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதி உருவாகிப் பெருவளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது. ஆனால், திருப்பாதிரிப் புலியூரும் புதுநகர்ப் பகுதியில் இன்று சேர்க்கப்பட்டிருந்தாலும், அது கூடலூரைப் போலவே பழைய நகர்தான். இருப்பினும், முதலில் தலைநகர்த் தகுதி பெற்றிருந்த பழைய நகராகிய கூடலூருக்கு எதிர்த்திசையில் - 4 கி.மீ. தொலைவில் புதிய புதுநகராகிய மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியோடு