பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

375


திருப்பாதிரிப் புலியூர் நகருக்குள் இருந்த அர்ச்சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி அண்மையில் சில ஆண்டுகட்குமுன் கம்மியன் பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. கம்மியன் பேட்டையின் வடக்கு எல்லையில் கெடிலம் ஓடுகிறது,

பாடலி புத்திரம்

பாடலி புத்திரம் என்னும் ஊர் ஒன்று இருந்ததாகப் பெரிய புராணத்தால் தெரிய வருகிறது. ‘பாடலம் என்றால் பாதிரி, பாடலி புத்திரம் என்றால் பாதிரி மரம் நிறைந்த இடம்; எனவே, திருப்பாதிரிப் புலியூரைக் குறிக்கும் வட மொழிப் பெயர்தான் ‘பாடலி புத்திரம்’ எனப் பலரும் கூறுகின்றனர். பாடலி புத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? இந்த ஐய வினாவிற்குப் பெரிய புராணத்திலேயே விடை இருக்கிறது. இந்த இரண்டு இடப் பெயர்களையும் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தனித்தனிச் சூழ்நிலையில் தனித்தனியாகக் கூறியுள்ளார். இதைக் கொண்டே இரண்டையும் வெவ்வேறாகத் துணியலாம்.

திருவாமூரில் திலகவதியாரின் தம்பியாகப் பிறந்த திருநாவுக்கரசர் இளமையில் பெற்றோரை இழந்தபின், பாடலிபுத்திரம் என்னும் ஊரை யடைந்து சமண மதத்தில் சேர்ந்து பெரிய தலைவராகத் திகழ்ந்தார். இதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்:

[1]“பாடலிபுத் திரமென்னும் பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார்”
“அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம்
பொங்குமுணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுழு உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வாரவர்க்குத்
தங்களின்மே லாந்தரும சேனர்எனும் பெயர்கொடுத்தார்”
‘அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண்
உய்த்தஉணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்.”


  1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 38, 39, 40,