பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

கெடிலக்கரை நாகரிகம்


பெரிய உணவு விடுதி ஒன்று இருப்பதைக் காணலாம். இப்போது இந்த இடத்தில் ‘கிளி கொஞ்சுகிறது’. சில்லாண்டுகட்கு முன் இந்த இடம் ஒதுக்குப் புறமாகப் பாழடைந்து கிடந்தது. அதற்கும் பல்லாண்டுகட்கு முன் இந்த இடம் மிகவும் சிறப்புற்றுத திகழ்ந்தது. இந்த இடத்தில் ஓர் அரசரின் அரண்மனை இருந்தது. ‘நவாப் உத்தவுலா’ பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கடலூரை ஒரு முக்கிய நிலையாகக் (கேந்திரமாகக்) கொண்டிருந்தார்; கெடிலக் கீழ்க்கரையில் மூன்றடுக்கு அரண்மனை கட்டிக் கொண்டார். அதற்குக் ‘கெடிலம் கேசில்’ (Gadilam castle) என்பது பெயர். அந்த அரண்மனையை யொட்டி எதிரில் ஒரு சிறு திடல் (மைதானம்) இருந்தது. அது ‘கேசில் மைதானம்’ என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பியர்களின் போராட்டத்திற்கிடையே அரண்மனை அகப்பட்டுச் சீரழிந்தது. 1940ஆம் ஆண்டளவில் கூட அந்த அரண்மனை பாழடைந்த நிலையில் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. இந்த அரண்மனைத் திடலில் ‘இடம் பெயரும் திரைப்படக் கொட்டகைகள்’ (டூரிங் சினிமா) இருந்து வந்தன. 1930 - 35 ஆம் ஆண்டளவில் பேசாத படங்கள் இங்கே திரையிடப்பட்டன; பின்னர்ப் பேசும் படங்கள் திரையிடப் பட்டன. இடையிடையே பாழடைந்து கிடந்த நிலைமைக்குப் பின் இப்போது ‘பிருந்தாவனம்’ உணவு விடுதி இந்த இடத்தை அணி செய்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இடத்தையொட்டிப் புதுப்பாளையம் அமைக்கப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே, இந்தப் பகுதி பிற்காலத்தது என்பதை உணரலாம். கடலூர்ப் புதுநகர், நியூ டவுன் (New Town), என்.டி. (N.T.) என்னும் பெயர்களின் தோற்றமே புதுப் பாளையத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான். இந்தப் பகுதியில், அலுவலகங்களில் பணிபுரிவோரும் வழக்கறிஞர்கள் பலரும் வாழ்கின்றனர்.

புதுப்பாளையத்தின் வடமேற்கு மூலையில் பெருவெளித் திடலை (மைதானத்தை) ஒட்டினாற்போல் நகராட்சி உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளி பல ‘அவதாரங்கள்’ எடுத்து இப்போது இந்த நிலையில் உள்ளது இது 1879ஆம் ஆண்டில் இரண்டாந்தரக் கலைக் கல்லூரியாக உயர்த்தப்பட்டு ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் கூடலூரில் நடைபெற்று வந்தது. பின் 1877இல் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன, அடுத்த ஆண்டே - 1888இல் - மீண்டும் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன. பின்னர்