பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

407


இருக்கிறது. இவ்விளக்கு 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும் ஒளி காட்டும். இப் பகுதியில் படகு கட்டும் தொழில் நடைபெறுகிறது.

கோரி

இங்கே சேர்க்கானவதியானுடைய கோரி இருப்பதால் இப்பகுதி கோரி என அழைக்கப்படுகிறது. இது பதினைந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ஆர்க்காட்டு நவாப்புகள் இந்தக் கோரிக்குப் பல உடைமைகளை அறக்கட்டளையாக அளித்துள்ளனர்.

உப்பனாற்றைக் கடந்து சென்று இயற்கைக் காட்சிமிக்க அக்கரைத்தீவு ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது கண்கட்கும் கருத்துக்கும் ஒரு பெரு விருந்தாகும்.

வெளிப்புற ஊர்கள்

இதுகாறும், ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் கெடிலம் ஆற்றின் தென்கரையிலிருந்தோ அல்லது வட கரையிலிருந்தோ 10 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் இன்றியமையா ஊர்களைப் பற்றிய விவரங்கள் ஆராய்ந்து விளக்கப்பட்டன. இனி, ஒருசார் தொடர்பு பற்றிக் கெடிலக் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்கு அப்பாலும் கடலூர் வட்டத்திற்குள் உள்ள இன்றியமையா ஊர்கள் சிலவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:-

நல்லாற்றூர்

இது கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்தில் - கடலூருக்கு வட கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தொண்டகத் தேவாரத்தில் பாடப் பெற்றுள்ளது. இறைவன் பெயர் சொர்ண புரீசுரர்; இறைவி பெயர்: திருவழகி. இவ்வூரில் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப்படும் பெரியாரின் அடக்கமும் கோயிலும் உள்ளன. இக்கோயிலை வலம் வந்து வழிபடும் ஊமைகள் பேசுவர் என்னும் நம்பிக்கை இருந்து வருகிறது. மயிலம் - பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகளின் கிளைமடம் ஒன்றும் இங்கே உள்ளது.

புதுச்சேரியிலிருந்து நல்லாற்றுாருக்குப் பேருந்து வண்டிகள் மிகுதியாகச் செல்கின்றன. விழுப்புரம் - புதுச்சேரிப் புகைவண்டிப் பாதையில், கண்டமங்கலம் என்னும் சின்னபாபு சமுத்திரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் நல்லாற்றுார் உள்ளது.