பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/422

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

421


மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருப்பதும் உண்டு. இந்த அடிப்படையில், பிற பகுதிகளினும் திருமுனைப்பாடி நாட்டின் வாழ்க்கை முறையில் சில வேறுபாடுகள் இருக்கக் கூடும். இந்த நாட்டிலேயே மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம் வேறுபாடு உண்டு. இசுலாமியர், கிறித்தவர், பிராமணர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார் முதலிய இனத்தவரின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் தமிழகம் முழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, இத்தகு இனத்தவர்களை விட்டுவிட்டு. இடத்திற்கு இடம் மாறுபடும் பிற இனத்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுப் பகுதியில் பின்பற்றும் வாழ்க்கை முறைகளையும் கையாளும் பழக்க வழக்கங்களையும் இங்கே ஆராய்வாம். இவர்களுள்ளும் இனவாரியாக நோக்காமல், ஏறக்குறைய எல்லா இனத்தவர்க்கும் பொதுவாகக் கருதப்படக்கூடிய முறைகளைக் காண்பாம். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறைகளையே அந்நாட்டின் பொதுவான வாழ்க்கை முறைகளாகக் கொள்ள வேண்டும் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. பின் கூறப்படும் வாழ்க்கை முறைகளுள்ளும் பழக்க வழக்கங்களுள்ளும் ஒரு சில, இனத்திற்கு இனம் வேறுபட்டி ருப்பினும், மிகப்பல, எல்லா இனத்தவர்க்கும் ஒத்தே இருக்கும்.

பிறப்பு வளர்ப்பு

முதல் பிள்ளைக்குத் தலைச்சன் என்றும் இரண்டாம் பிள்ளைக்கு இடைச்சன் என்றும் கடைசிப் பிள்ளைக்குக் கடைக்குட்டி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்றோடு நிறுத்திக் கொள்வது நல்லது என இந்தக் காலத்தில் அறிஞர்களாலும் அரசியலாராலும் பரிந்துரைக்கப்படுகிறது; கேட்டால் தானே? தலைச்சனைத் தலைப்பிள்ளை என்றும் சீமந்த புத்திரன் என்றும் சொல்லுவதும் உண்டு. முன் பிள்ளையையும் பின் பிள்ளையையும் ‘முன்னனை’ ‘பின்னணை’ என்று குறிப்பிடும் வழக்கமும் உளது. நிற்காமல் வரிசையாகத் தொடர்ந்து பிறந்து கொண்டேயிருக்கும் பிள்ளைகளைத் தலைச்சன் பேறு, இடைச்சன் பேறு, மூன்றாம் பேறு, நான்காம் பேறு, ஏழாம் பேறு, பத்தாம் பேறு, பன்னிரண்டாம் பேறு என்று எண் பெயரால் அடுக்கிக் கொண்டே போகும் பெயர் வழக்காறும் உண்டு.

முதல் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறக்க வேண்டும். மூன்றாம் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறந்தால் தாய் வீடு உருப்படாதாம்; அதனால் கணவன் வீட்டில்தான் பிறக்க வேண்டுமாம். எத்தனையாவது பிள்ளையானாலும்