பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

423



‘கேட்டையில் பிறந்தவர் கோட்டையை இழப்பர்’.

இப்படி இன்னும் எத்தனையோ நம்பிக்கைகள் உள்ளன.

கருவுற்றிருக்கும் பெண்ணை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும்; துன்புறுத்தலோ புண்படுத்தலோ இன்றி மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும்; கேட்டதை வாங்கித் தரவேண்டும்; விரும்பிய உணவை ஆக்கிப் படைக்க வேண்டும் - இந்த நடைமுறை நம்பிக்கை உள்ளது. முதல் முதலாகக் கருவுற்ற ஐந்தாம் திங்களில் (மாதத்தில்) ‘ஐந்திற்கு இடுதல்’ என்னும் மங்கல வினையும், ஏழாம் திங்களில் ‘சூல்’ என்னும் மங்கல நிகழ்ச்சியும் நடத்தப் பெறுகின்றன. சூல் விழாவைச் ‘சூல் பண்டம்’ என்றும், சீமந்தம் என்றும், பூ முடித்தல் என்றும் இங்கே சொல்கின்றனர்; இதுதான் பிராமணர்களால் ‘வளைகாப்பு’ என அழைக்கப்படுகிறது; இதனையே எளிய மக்கள் பேச்சு வழக்கில் ‘நல்ல சோறு ஆக்கிப் போடுதல்’, ‘நல்ல கஞ்சி காய்ச்சி ஊற்றுதல்’ என வேடிக்கையாகக் கூறுவர். இந்த விழா பெண் வீட்டார் செலவில் பிள்ளை வீட்டில் நடைபெறும். பெண் வீட்டார் தத்தம் வசதிக்கேற்பப் பல்வேறு வரிசைகளுடன் வந்து விழாவை நடத்துவர்; மிடுக்கான விருந்து நடைபெறும். சூல்விழா முடிந்ததும் பெண்ணைத் தாய்வீட்டார் தம் இல்லத்திற்கு அழைத்தேகுவர்; அப்போது தவறினால் ஒன்பதாம் திங்களில் அழைத்துச் செல்வர். குழந்தை பிறந்த மூன்று அல்லது ஐந்தாம் திங்களில் பிள்ளை வீட்டார் காப்பரிசியுடனும் அணிகலன் முதலியவற்றுடனும் வந்து சிறப்புச் செய்து தாயையும் சேயையும் தம் வீட்டிற்கு அழைத்துப் போவர்; இந் நிகழ்ச்சிக்குக் காப்பிடுதல்’ என்று பெயராம்.

பொதுவாக எத்தனையாவது பிள்ளை பிறந்தாலும் பிறந்த ஒன்பதாம் நாள் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் நிகழ்ச்சி நடைபெறும்; அன்று எருக்கம் நாரினால் ஆன அரைஞாண். கயிறு குழந்தைக்குக் கட்டப்படும். பெயர் சூட்டு விழாவும் உணவு ஊட்டும் விழாவும் சிலரால் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. பலர் செய்வதில்லை. முதலாண்டு அல்லது மூன்றாம் ஆண்டு அல்லது ஐந்தாம் ஆண்டு அஃதாவது ஒற்றைப்படை ஆண்டில் குழந்தைக்கு முடி எடுக்கின்றனர். பின்னர்க் காதணி விழா நடைபெறும். இவ்விரண்டும் குடும்ப வசதிக்கேற்ப நடைபெறும். விழா நடத்திக் காது குத்தாமல் வீட்டோடு காது குத்திக் கொண்டால் அதற்குத் ‘திருட்டுக் காது குத்துதல்’ என்று பெயர் சொல்லப்படுகிறது. ஐந்தாம் வயதில் எழுத்தறிவித்தல் (அட்சராப்பியாசம்) நடத்தப் பெறுகிறது. சிலர் இதனை ஒரு