பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கெடிலக்கரை நாகரிகம்


மலட்டாற்றிற்கு உரியது; அதனால், மலட்டாற்றையும் பாராட்ட வேண்டியதுதான்.

பாலமும் அணையும்

மலட்டாறுதானே என்று இதை எளிதாய்ப் புறக்கணித்து விடுவதற்கில்லை. வெறும் தரைப் பாலம் அமைத்து இதை ஏமாற்றிவிட முடியாது. கடுமழை பெய்யும் காலத்தில் இதில் பெருவெள்ளம் ஓடுவதால் இதைக் கடப்பதற்குப் பெரிய பாலம் வேண்டியுள்ளது. கடலூரிலிருந்து பண்ணுருட்டி - திருவெண்ணெய் நல்லூர் வழியாகத் திருக்கோவலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பண்ணுருட்டிக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் மேல் உயரமான அழகிய பாலம் ஒன்று கட்டப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவெண்ணெய் நல்லூர் (ரோடு ) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 11 கி.மீ. தொலைவில். திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் இடையாறு என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில் மலட்டாற்றில் ஒருசிறு அணை கட்டப்பட்டுள்ளது. இடையாறு அணை என்று இது அழைக்கப்படுகிறது. இப்படியாக மலட்டாறும் ஆற்றிற்குரிய இலக்கணங்களுள் பலவற்றைப் பெற்றுப் பயனளிக்கிறது.

விருத்த பினாகினி

மலட்டாறு என்றதும் ஒரு சிலருக்குக் குழப்பம் ஏற்படலாம். ஏனெனில், மலட்டாறு என்னும் பெயரில் மற்றும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறும் பெண்ணையாற்றிலிருந்துதான் பிரிகிறது. ஆனால், இது கடலோடு சென்று கலக்கிறது. இந்த மலட்டாற்றைப் பற்றி மட்டும் தெரிந்து வைத்து, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றைப் பற்றி அறியாதவர்கள் குழப்பம் அடையத்தானே நேரும்! கெடிலத்தோடு கலக்கும் மலட்டாறு திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை என்னும் ஊருக்கருகில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து பிரிந்து திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்து விடுகிறது. கடலோடு கலக்கும் மலட்டாறு, பெண்ணையாறு திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்ததும், சிறிது தொலைவிலேயே விழுப்புரம் வட்டத்தில் அப் பெண்ணையாற்றின் இடப்பக்கத்தி