பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

கெடிலக்கரை நாகரிகம்


இடைக்காலத்தில் ஏற்பட்டது. இந்தக் காலத்தில் ஐயரை வைத்துச் செய்யும் புரோகிதத் திருமண முறை குறைந்து வருகிறது. ‘தமிழ்த் திருமணம்’ என்ற பெயரில், ஐயரும் புரோகித வடமொழி மந்திரமும் இன்றித் தமிழிலேயே நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றுத் திருமணம் நிறைவேறுகிறது. இருப்பினும், இன்றும் (1967) புரோகிதத் திருமணமும் நடைபெற்று வருகிறது.

மனைவி இறந்துவிடின் கணவன் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் என்ற உரிமை தொன்று தொட்டு இருந்துவருகிறது. இஃதன்றி, மனைவியிருக்கவும் மேலும் திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் ஆடவர்க்கு இருந்து வந்தது; இப்போது இந்த உரிமை அரசு ஆணையால் தடுக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்தால் இன்னொருவனை மணந்து கொள்ளும் உரிமை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்ததில்லை. இப்போது சீர்திருத்தம் மறுமலர்ச்சி என்னும் பெயரால் மறுமணம் என்னும் விதவா விவாகம் சமூகத்தில் நடைபெறுகிறது. ஆனால், நெடுநாளாய்த் திருமுனைப்பாடி நாட்டில், கணவன் இறந்தால் பெண் மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் சில இனத்தவரிடையே உள்ளது. இந்தப் பெண் ‘கட்டு பெண்’ என்று சொல்லப்படுவாள். இத்திருமணம் வீட்டோடு சுருக்கமாக நடைபெறும்; இதற்கு ‘நடு வீட்டுத் தாலிகட்டுதல்’ என்று பெயராம். ஆனால், கணவன் இருக்கும்போது மணவிலக்கு என்பது கிடையாது.

காதல் மணம் பண்டைக் காலத்தில் நடைபெற்றதாக இலக்கியங்களால் அறியப்படுகிறது. ஆனால், இடைக்காலத்தில் பெற்றோர் அறியாத காதல் மணம் களவொழுக்கமாகவே ஏன் - கற்புகெட்ட செயலாகவே கருதப்பட்டது; எல்லாரும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோரால் மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் திருமணமே உயர்ந்த திருமணமாகக் கருதப்பட்டது. ஏற்ற மணமக்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெரியோர்க்கே இருப்பதாக நம்பப்பட்டது. கலப்பு மணமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போது காதல் மணமும் கலப்பு மணமும் தாராளமாகத் தலைகாட்டுகின்றன.

இறப்பு

எப்பேர்ப்பட்டவர்களுடைய வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் இறந்து போனதாகவே வரலாறு முடிகிறது. இதற்கு வேறு வழியில்லை போலும்! எந்த ஊருக்குச் சென்றாலும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் காணப்படுகின்றன. எவர்