பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

கெடிலக்கரை நாகரிகம்


வாயில்கள் இருக்கும். அவ்வாறு தடுப்புச் சுவர் இருந்தால் அதில் பலகணி (சன்னல்) இருக்கும். வீட்டுத் தெரு வாயிலுக்கு நேரே சந்துத் தெரு இருக்கக்கூடாது; அப்படியிருப்பதற்குச் ‘சந்து குத்து’ என்பது பெயர். சந்து குத்து இருந்தால் வீடு உருப்படாதாம். வீட்டிற்கு எதிரில் இன்னொரு வீடு இருக்கவேண்டுமே யொழியக் காலிமனை இருக்கக்கூடாதாம்; காலிமனை இருந்தாலும் வீட்டிற்கு வளர்ச்சியில்லையாம். வீட்டின் முன் புறத்தில் முருங்கை மரமும் பின்புறத்தில் புளிய மரமும் இருக்கக் கூடாதாம். ‘முன் முருங்கையும் பின் புளியனும் உதவா’ என்பது முதுமொழி. வீட்டில் கருவேப்பிலை மரம் போன்ற சிலவகை மரங்களும் இருக்கக்கூடாதாம்.

தெருவாயிற் படியில் இரட்டைக் கதவுகள் இருப்பின், ஒரே நேரத்தில் இரண்டு கதவுகளையும் திறந்து வைக்கமாட்டார்கள். ஒரு கதவுதான் திறந்தபடி இருக்கும். சாவு வீட்டில்தான் இரண்டு கதவுகளும் திருந்திருப்பது வழக்கம். கதவிலுள்ள தாழ்ப்பாளை யாரும் ஆட்டக் கூடாது; ஆட்டினால் சண்டை வருமாம்.

பாகம் பிரிக்கும்போது மூத்த பிள்ளைக்குக் கூடத்துப் பக்கம் கொடுக்கப்படும். ஒரே வீட்டில் குடியிருப்பினும் அல்லது தனித்தனி வீடுகளில் குடியிருப்பினும் மூத்தபிள்ளை மேற்குப் பக்கத்திலும் இளைய பிள்ளை கிழக்குப் பக்கத்திலும் இருக்கவேண்டுமெனச் சொல்லப்படுகிறது.

இந்தக் காலத்தில் வீடுகளின் அமைப்பில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்று சொல்லத் தேவையில்லை.

பெருநாட்கள்

பண்டிகை என்பது ‘பெருநாள்’ அல்லது ‘பெரிய நாள்’ என்னும் பெயரால் இங்கே மக்களால் குறிப்பிடப்படுகிறது. ‘நல்ல நாள் - பெரிய நாளிலே இப்படிச் செய்யலாமா?’ நல்ல நாளும் பெரிய நாளுமாய்ப் பார்த்தா இப்படிச் செய்கிறாய்? என்பன பேச்சு வழக்குகள். இப்பகுதியில் குறிப்பிடத்தக்க முறையில் ஆறு பெருநாட்கள் (பண்டிகைகள்) கொண்டாடப் படுகின்றன; அவை; சித்திரைத் திங்களில் தமிழ்ப் புத்தாண்டுப் பெருநாள், ஆவணித் திங்களில் பிள்ளையார் சதுர்த்திப் பெருநாள், புரட்டாசித் திங்களில் ஆயுதபூசை என்னும் கலைமகள் விழாப் பெருநாள், ஐப்பசித் திங்களில் தீபாவளிப் பெருநாள், கார்த்திகைத் திங்களில் கார்த்திகைப் பெருநாள், தைத்திங்களில் பொங்கல் பெருநாள் ஆகியவையாகும். இவையாறும் தமிழக முழுதும் கொண்டாடப்படினும், இப்பகுதியில் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பெறும் முறையில் சிறு வேறுபாடும் இருக்கலாம்.