பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

441


உண்ணாநோன்பு கொண்டு, மாலையில் கோயிலில் ‘தீபம்’ கண்ட பின்னரே வீட்டில் படைத்து உண்பர். பொழுது போனதும், தெரு முற்றத்திலும் வீடு முழுவதிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு அணிசெய்யும். கோயில்களின் உச்சியிலும் மலை உச்சியிலும் தீபவிளக்கு ஏற்றப்பட்டுத் திருவிழா நடைபெறும். தெருக்களில் ‘சொக்கப் பனை’ கொளுத்தப்படும்.

பிள்ளைகள், பனம் பூக்களைச் சுட்டுக் கரியாக்கித் தூளைத் துணியில் இட்டுப் பந்தாகச் சுருட்டிப் பனமட்டைக் கழிக்குள் வைத்துக் கட்டி நெருப்புப் பற்றவைத்துக் ‘கார்த்திகை’ சுற்றுவார்கள்; அதிலிருந்து தீப்பொறிகள் பூப்பூவாக விழுவது தெரு முழுதும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இதுபோல் தொடர்ந்து மூன்று நாள் சுற்றுவார்கள். முதல் நாள் அண்ணா மலையார் கார்த்திகை என்றும் இரண்டாம் நாள் நாட்டுக் கார்த்திகை என்றும் சொல்லிக் கார்த்திகை சுற்றுவார்கள். மூன்றாம் நாள் காட்டுக் கார்த்திகை என்று சொல்லிச் சுற்றி முடித்து விட்டு, இறுதியாகத் தெரு மூலைக் காட்டிலோ - ஊர் மூலைக் காட்டிலோ, சுற்றிய கார்த்திகைக் கழியைத் தரையில் அடித்துப் போட்டு விடுவார்கள்.

தமிழ் நாட்டில் பழம்பெருங் கார்த்திகை விழா சங்க நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விழா திருவண்ணா மலைக்கே சிறப்பானது. ஆதலின், முதல் நாள் விழாவை அண்ணாமலையார் கார்த்திகை என்கின்றனர். இரண்டாம் நாள் விழாவை, அந்த அந்த ஊருக்கு உரியதான ‘நாட்டுக் கார்த்திகை’ என்கிறார்கள். சில குடும்பங்களில் நாட்டுக் கார்த்திகை இரவு, கொழுக்கட்டை, துவரம் பருப்புக் கடையல், முருங்கைக் கீரை துவட்டல், வாழைக்காய்ப் பொரியல் (இவை நான்கும் கட்டாயம்) முதலிய உணவுப் பொருள்கள் செய்து படைத்து . உண்பர். புலால் உண்பவர்கள் ஒரே நேரத்தில் இருவகைப் படையல் படைப்பர். அஃதாவது, சைவக் கடவுளுக்குச் சைவ உணவு வகைகளை வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர்; அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ‘காத்தவராயன்’ என்னும் சிறு தெய்வத்திற்குப் புலால் உணவு வைத்துப் படைப்பர்; இதற்குக் ‘காத்தவராயன் படையல்’ என்று பெயராம். கள் - சாராயம் இருந்த காலத்தில் அவற்றையும் வைத்துப் படைத்தனர். மது அருந்தாத குடும்பத்தார் கூட, காத்தவராயனுக்குக் கள் - சாராயம் வைத்துப் படைத்துப் பிறரிடம் எடுத்துக் கொடுத்து விடுவது வழக்கம். நாட்டுக் கார்த்திகைப் படையல் ஒரு சில குடும்பங்களிலேயே உண்டு.