பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

453


புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுவார், எத்தகைய ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்காது. ஆனால், எல்லாம் அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட அளவிலேயே நடைபெறும். ஊராட்சிக்காகத் தலைக்கட்டுக்கு இவ்வளவு என்று வரி உண்டு. ஊர்க் கூட்டத்தில் ஒன்று பேசி முடிவு செய்ய வேண்டுமெனில், வேலையை நிறுத்திவிட்டு ஊரார் அனைவரும் வந்தேயாக வேண்டும்.

இந்தப் பகுதியிலும் பெண்கள் இல்லத்தரசியராகவே இருக்கின்றனர் இல்லத்திற்கு வெளியே ஆண்களைப் போல் நடந்து கொள்வதில்லை; அயல்நாடுகளில் உள்ளது போல் ஆண்களுடன் கூசாது தொடர்பு கொள்வதில்லை. தம் கணவரிடங்கூட வீட்டிற்கு வெளியே நாணாது கூசாது உரிமையுடன் பழகுவதில்லை. பிறர் எதிரே தம் கணவருடன் பேசவும் கூசும் பெண்டிரும் உளர். வீட்டிலே உரிமை கொடுக்காவிடினும் அவ்வுரிமையைத் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் பெண்டிரும், வீட்டிற்கு வெளியே உரிமை கொடுத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த நிலைமையிலிருந்து இப்போது ஒரளவு மாறுதல் தெரியத் தொடங்கி யுள்ளமை வரவேற்கத் தக்கது.

கொச்சைப் பேச்சுகள்

இந்தப் பகுதியில் வழங்கப்படும் சில கொச்சைப் பேச்சுருவங்கள் வருமாறு:

தூய உருவம் கொச்சை உருவம்

தாராளமாக - தாளாரமாக
திருப்பி - திலுப்பி
நான்கு - நாலி
ஐந்து - அஞ்சி
முப்பது - துப்பது
எண்பது - எம்பளது
ஆமாம் போலிருக்கிறது - ஆமாம் பெலக்கு
இருக்கிறது - இருக்குது
என்று சொல்கிறார் - இன்றார்
என்று சொன்னார் - இன்னார்
கொஞ்சம் - கொஞ்சோண்டு
போய்விட்டு வருகிறேன் - போய்ட்டுவரேன், பூட்டுவரேன்
சொன்னேன் - சொஞ்ஞேன்
என்ன அது - எஞ்ஞா அது