பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

49


அடுப்புக் கூட்டியதுபோல் ஒன்றுக் கொன்று மிக அருகிலேயே இருக்கக் காணலாம். மேலே மலையும் கீழே ஆறும் ஒருசேர வளைந்துள்ள இடம், அணை கட்டுவதற்கு மிகவும் தகுந்த சூழ்நிலை உடையதல்லவா? அதனால்தான் இந்த இடத்தில் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டுள்ளது, அணையின் தேக்கத்துக்கும் மலைக்கும் இடையிலுள்ள திருக்கோயில் பலவகையிலும் சிறப்புடையதே!

மேலுள்ளது, திருவயிந்திரபுரத்தில் ஆறு வடக்கு நோக்கி வளைவதற்குக் காரணமான கேப்பர் மலைப்பகுதியின் படமாகும். படத்தில், நம் வலக்கைப் பக்கமாக இருக்கும் மலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிக் கிடக்கும் கேப்பர் மலை. இடக்கைப் பக்கமாக இருக்கும் மலை, கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் திருவயிந்திரபுரம் மலைக்குன்று. இந்தப் பிதுக்கம், கேப்பர் மலையிலிருந்து நேர் நீட்டமாக இல்லாமல், கொக்கிபோல் வளைந்திருப்பதைப் படத்தில் காணலாம். படத்தில் இருகைப் பக்கங்களிலும் தெரியும் இரண்டுமலைப் பகுதிகளின் நடுவே தொலைவிலே ஒரு மலைப் பகுதி இருப்பதைக் காணலாம். அது தனிமலையன்று; வலக்கைப் பக்கம் தெரியும் கேப்பர் மலையையும் இடக்கைப் பக்கம் தெரியும் திருவயிந்திரபுரம் குன்றையும் தொடர்ச்சியாக இணைக்கும் கொக்கி போன்ற மலை வளைவின் நடுப்பகுதியே அது. இந்த மலை வளைவின் நடுவே ஒரு மலைப் பள்ளத்தாக்கு இருப்பதையும். அப் பள்ளத்தாக்கைச் சுற்றி மூன்று புறங்களில் மலைப் பகுதியும் ஒரு புறத்தில் ஆறும் இருப்பதையும் காணலாம். அம்மலைச் சரிவுப் பள்ளத்தாக்கு, மிகவும் அழகானதும் வளமுள்ளதுமாகும். அது, சுற்றியுள்ள மலைப் பகுதியை நோக்கப் பள்ளத்தாக்கே தவிர தன் கீழே ஒடும் ஆற்றை நோக்க மேட்டுப் பகுதியே. இந்த மலைப் பிதுக்க வளைவின் கீழேதான் கெடிலம் வளைகிறது. இந்த இடம் கண் கொள்ளாக் காட்சியாகும்.

அடுத்த பக்கத்தில் காணப்படுவது கெடிலத்தின் கரையில் உள்ள திருவயிந்திரபுரம் தேவநாத சுவாமி கோயிற் காட்சி. கோயில் கோபுரங்களும் வேறு சில பகுதிகளும் தண்ணிருக்குள் தலைகீழாய்த் தெரிவதைக் காணலாம். ஆற்றின் வளைவுக்கும் அணைக்கும் இடைப்பட்ட பகுதி இது. இந்த இடத்தில் நின்று கொண்டு, நான்கு பக்கங்களிலும் சுற்றிச் சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் தெவிட்டாத விருந்து கிடைக்கும். இங்கிருந்து பிரிந்துவர மனமே வராது. ஆற்றின் வளைந்த தோற்றத்தின் அழகை அடுத்துவரும் படத்தில் கண்டு களிப்புறலாம்:-

கெ.4.