பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

கெடிலக்கரை நாகரிகம்


எனப்படுபவை சில, கி.மு. 6000 தொட்டு கி.மு. 3000 வரை செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் காலத்திலேயே உழவு, நெசவு, மண் மர உலோகக் கைத்தொழில்கள், பண்டமாற்று வாணிகம், குறிப்பு எழுதி வைத்தல், ஓவியம், சிற்பம், கட்டடவியல், கணிதம், வானவியல், கடவுள் வழிபாட்டு நெறி, அரசியல் அமைப்பு முதலியவை இருந்தன.

இந்தியாவில் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையில் தொல் பொருள் ஆராய்வாளர்கள் சிந்து மாநிலத்தில் ‘மொகஞ்சதாரோ’ முதலிய இடங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் ‘ஹரப்பா’ முதலிய இடங்களிலுமாக 60 இடங்களில் 1921 - 22 ஆம் ஆண்டு காலத்தில் அகழ்ந்து ஆராய்ந்து பல பொருள்களைக் கண்டறிந்து பல செய்திகளை வெளிப்படுத்தினர். சிந்து வெளி நாகரிகம் எனப்படும் இதன் காலம் கி.மு. 3000 - கி.மு. 1500 ஆகிய ஆண்டுகட்கு இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிந்து வெளி அகழ்வாராய்ச்சியினால், பல வசதிகளுடன் கூடிய கட்டடங்களைக் கொண்டிருந்த நகரங்கள் புதையுண்டு கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய நாகரிகம் போலவே சீன நாகரிகமும் பழைமையானது. ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு முன்னே அமெரிக்கக் கண்டத்திலும் ஆஸ்ட்டெக் நாகரிகம், ‘மாயா’ நாகரிகம், இன்கா நாகரிகம் எனப் பல நாகரிகங்கள் தோன்றிப் பதினாறாம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தன.

இப்படியாக உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி வளர்ந்து மறைந்துள்ளன. ‘உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் பிறந்து வளர்ந்து மறைகின்றன’ என ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்னும் அறிஞர் ‘மேல் நாடுகளின் வீழ்ச்சி’ என்னும் நூலில் கூறியுள்ளார். ‘எகிப்து, மெசபடோமியா முதலிய நாடுகளின் சிற்பங்களைக் கொண்டு, நாகரிகத்தில் வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி என மூன்று படிகள் இருந்தமை புலனாகிறது’ என்பதாக ‘சர் ஃபிலிண்டர்ஸ் பெட்ரி’ (Sir Flinders Petrie) என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியறிஞர் தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதியில் ஆற்றுவளச் சிறப்பால் விளைவும், அதனால் தொழில் வாணிகமும், அவற்றால் செல்வமும் முறையே செழிக்கின்றன; அதனால் பசிக்கவலை வாழ்க்கைக் கவலை நீங்க, பல்வேறு வகைக் கலைகள் தோன்றி வளர்கின்றன; இத்தகைய அமைப்பு நாகரிகம் எனப்படுகிறது. இத்தகைய அமைப்பு உள்ள இடங்களின் பெயரால் ‘நாகரிகங்கள்’ பெயர்