பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

கெடிலக்கரை நாகரிகம்



சொல்வதுபோல் கெடிலக்கரை நாகரிகத்திற்குத் தோற்றம் - மறைவு சொல்ல முடியாது. உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் தோன்றி வளர்ந்து - மறைகின்றன என்பதாக ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்பார் கூறியுள்ள பொதுவிதி கெடிலக்கரை நாகரிகத்திற்குப் பொருந்தாது விலக்காகிறது. கெடிலக்கரை நாகரிகம் கற்காலத்திற்கு முற்காலந்தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

கெடிலக்கரை நாகரிகத்தின் வளர்ச்சியின் இடையிடையே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த மாற்றங்கள், இயற்கையின் ஆற்றலாலும் காலத்தின் கோலத்தாலும் மதமாற்றங்களாலும், ஆட்சி மாற்றங்களாலும் அயலவர் தலையீட்டாலும் நிகழ்ந்திருக்கலாம். இடையிடையே ஏற்பட்ட மாற்றங்களுள் பொருந்தாத சிலவற்றைக் கெடிலக்கரை நாகரிகம் வென்று விழுங்கித் தனது பழைய தூய தனித்தன்மையை இழவாதிருப்பதுடன், வேறு சில நல்ல மாற்றங்களை வரவேற்றுப் பெற்று வளரவுஞ் செய்துள்ளது. ஒரிடத்து நாகரிகத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் நல்ல மாறுதல்களை வளர்ச்சியின் படிகள் என்று சொல்ல வேண்டும். வளர்ந்து வரும் குழந்தையின் தோற்றத்திலும் செயலிலும் பண்பிலும் பருவத்திற்குப் பருவம் மாறுதல்கள் இருக்கத்தானே செய்யும்?

எது நாகரிகம்?

சிறப்பாகக் கெடிலக் கரை நாகரிகம் எனப்படுவது எது என்று ஆராய்வது ஒருபுறம் இருக்க, பொதுவாக உலகில் நாகரிகம் எனப்படுவது எது என முதலில் ஆராய வேண்டும். ஆடம்பரமான ஆடையணிகள் அணிந்து மேனி மினுக்கி வாழ்வது நாகரிகம் எனச் சிலர் கூறலாம். மாட மாளிகை கூடகோபுரம் காட்டிச் செல்வச்செழிப்புடன் வாழ்வதுதான் நாகரிகம் என வேறு சிலர் சொல்லலாம். விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் துணைகொண்டு வியத்தகு வாழ்க்கை வாழ்வதே நாகரிகம் என மற்றொரு சாரார் மொழியலாம். கல்வியறிவொழுக்கங்களால் தலைசிறந்தவராய்த் திகழ்வதே நாகரிகம் என இன்னொரு சாரார் இயம்பலாம். இவையெல்லாம் சேர்ந்ததே நாகரிகம் என ஒரு சிலரும், இவற்றுள் எது ஒன்றும் நாகரிகமாகாது என வேறு சிலரும் கூறவுங்கூடும்.

[1]‘கிளைவ் பெல்’ (Clive Bell) என்னும் அறிஞர் நாகரிகம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: “கடவுள் நம்பிக்கையோ, கற்புடைமையோ, பெண்ணுரிமையோ, திருடாமையோ, உண்மை பேசுதலோ, தூய்மை உடைமையோ, நாட்டுப் பற்றோ, இன்ன


  1. Clive Bell’s Civilisation (Book)