பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை நாகரிகம்

503


பிறவோ நாகரிகம் ஆகமுடியாது. ஏனெனில், மிகவும் நாகரிகமுடையவர் என்று கூறிக்கொள்ளும் இனத்தவர் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுவதில்லை; அதற்கு மாறாக, மிகவும் நாகரிகமற்றவர் எனக் கூறப்படும் பழங்குடிமக்கள் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன” என்பதாகக் ‘கிளைவ் பெல்’ கூறுகிறார். இன்னின்ன நாட்டுப் பழங்குடி மக்களிடம் காணப்படும் இன்னின்ன நற்பண்புகள், இன்னின்ன நாட்டு நாகரிக மக்களிடம் காணப்படவில்லை எனக் கிளைவ் பெல் பெயர் சுட்டியும் கூறியுள்ளார். இவரைப் போலவே ‘வெஸ்டர் மார்க்’ (Wester Marck) என்னும் அறிஞரும் ஒத்த கருத்துத் தெரிவித்துள்ளார். அங்ங்னமெனில், இதுதான் நாகரிகமென எதை எடுத்தியம்புவது?

மேலும், ஒரு காலத்தில் நாகரிகமுடைய செயலாகக் கருதப்பட்ட ஒன்று, இன்னொரு காலத்தில் நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுவது உலகியலில் கண்கூடு. முன்னர் உலகில் உயர்வு - தாழ்வு கருதப்பட்டது; உயர் குலம் இழிகுலம் என்ற வேறுபாடு இருந்தது; ஆண்டான் - அடிமை என்ற பாகுபாடு இருந்தது; உயர்ந்த குலத்தினர் நாகரிகம் உடையவராகவும் மற்றவர் நாகரிகம் அற்றவராகவும், அவர்கட்கு இவர்கள் அடிமை ஊழியம் செய்ய வேண்டியவராகவும் உலகச் சூழ்நிலை முன்பு இருந்தது. இப்போதோ உயர்வு தாழ்வு பாராட்டுவதும், ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்திச் சுரண்டுவதும், ஒருவரோடொருவர் பிணங்கிப் பொருவதும் நாகரிகமற்ற செயல்களாக இழிக்கப்படுகின்றன. அளவுமீறி ஆடம்பரமாக உடுத்துவதும் உண்ணுவதும் மிகுந்த பொருட்செலவில் திருமணம் முதலிய நிகழ்ச்சிகள் நடத்துவதும் இன்ன பிறவும் முன்பு மிக்க நாகரிகச் செயல்களாகக் கருதப்பட்டன; இவை இப்போது நாகரிகம் அற்ற செயல்களாகப் பழிக்கப்படுகின்றன. இன்னும் கேட்டால், மிகுதியாகப் பிள்ளை பெறுவதும் இன்று நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ‘எது நாகரிகம்’ என்னும் பெருஞ்சிக்கலை அவிழ்ப்பதற்குப் பின்வருமாறு ஒரு தீர்வு கூறப்படுகிறது: ‘மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பே நாகரிகம்’ - என்பதாக அறிஞர்களால் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. இந்தக் கருத்து உண்மையே என்றாலும், மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பு எது? - என்பதாக மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த நிலையில், நாகரிகம் எது எனத் தெரிந்து கொள்வதற்கு உலகப் பேரறிஞராகிய திருவள்ளுவப் பெருந்தகையாரின் துணையை நாடுவது பயனளிக்கும்.