பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

கெடிலக்கரை நாகரிகம்


மக்களின் பண்பாலேயே வரையறுக்க முடியும் என்னும் கருத்து அந்தத் தலைப்பின் தொடக்கத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளது: (பக்கம் : 164-165) கெடிலநாடாகிய திருமுனைப்பாடி நாடு தன்னிடம் பிறந்தும் வாழ்ந்தும் சிறப்புற்ற பெருமக்களால் நாடுகளுக்குள் மிக்க பெருமைபெற்றுத் திகழ்கிறது என்னும் செய்தி இந்நூலில் பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பண்பு ஒரு காலத்தில் உயர்ந்திருக்கலாம்; இன்னொரு காலத்தில் தாழ்ந்து போகலாம். கெடில நாட்டின் பண்போ, அன்றுதொட்டு இன்றுவரை தாழவேயில்லை; வர வர உயர்ந்து வளர்ந்துகொண்டே யிருக்கிறது; இதற்குச் சான்று பகர, நமக்கு ஒரு தலைமுறைக்கு முன் நம் தந்தையார் - பாட்டனார் காலத்தில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க வள்ளலார் ஒருவரே போதுமானவர். இந்நூலில் ‘கெடில நாட்டுப் பெருமக்கள் வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் இராமலிங்க அடிகளாரைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் முழுதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கன.

‘வடலூர் கடலூர் ஆகும்’ எனக் கூறிக் கடலூர் வட்டத்தில் உள்ள கடலூரில் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் ஒரே உலகக் கண்கொண்டு ‘ஒருமை நன்னெறி இயக்கம்’ (சமரச சன்மார்க்க சங்கம்) கண்டார்; உலக மக்களை வேறு பிரிக்கும் சாதி - சமய சாத்திரப் பாகுபாடுகளைக் கடிந்தார்; எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி அருட்கண்ணோட்டம் செலுத்தினார்; இன்ன பிற உயரிய கோட்பாடுகளை மற்றவர்க்கும் அறிவுறுத்தித் தாமும் பின்பற்றி யொழுகினார். ஈண்டு, அவர் அருளிய,

 “பித்தெலா முடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்த சன்மார்க்க
சங்கம் என்றோங்குமோ...”

“ஒருமையின் உலகெலாம் ஓங்குக வெனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்.”

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே...”

“சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்”

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணியுள்ளே