பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை நாகரிகம்

507


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான் தேர்ந்தேன்...”

முதலிய அருட்பாக்கள் ஆழ்ந்து படித்து ஆராயத்தக்கன. வள்ளலார், மாந்தருக்குள் பாகுபாடு கருதாதது மட்டுமன்று உயிர்கட்குள்ளும் பாகுபாடு கருதினாரல்லர்: அதனால்தான் ‘எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி’ என்று மொழிந்தார். வள்ளலார் கொண்டிருந்த நயத்தக்க நாகரிகமாகிய அருட் கண்ணோட்டத்தின் எவரெஸ்ட் உயர் எல்லைக்குப் பின்வரும் பாடல் தக்க சான்று பகரும்:

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”

வள்ளலார், ஏழைகளாய் உடல் மட்டுமன்று உள்ளமும் இளைத்துப் போனவர்களைக் கண்டு தாமும் இளைத்துப் போனாராம்; பிணியினால் வருந்தினோரைக் கண்டு உள்ளம் துடிதுடித்தாராம்; வீடுதோறும் இரந்தும் பசிநீங்காது சோர்ந்து போன எளியோரைக்கண்டு உள்ளம் பதைபதைத்தாராம். அவரது அருள் உள்ளம் என்னே! அதனால்தான் வடலூரில் அறச்சாலை நிறுவி ஏழை எளியோர்க்கு உணவளிக்க ஏற்பாடு செய்தார்; அந்தப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறறிவு பெற்ற உயர்திணையாகிய மக்களுயிரிடத்து வள்ளலார் அருட்கண் செலுத்தியிருப்பதனினும், ஓரறிவே உடைய அஃறிணை உயிராகிய பயிர்வகையிடம் அருட்கண்ணோட்டம் செலுத்தியிருப்பது பெருவியப்பிற்குரியது. ‘வா’டிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் உளம் நெகிழ்ந்து உரைத்திருப்பது, கல் நெஞ்சையும் கரையச் செய்கிறது. இதனினும் உயர்நாகரிகப் பண்பு இன்னும் என்ன வேண்டும்? இத்தகைய அருள்வள்ளலை உருவாக்கிய பெருமை திருமுனைப்பாடி நாட்டினுடையதாகும். வடலூர் வள்ளலார் கண்ட ஒருமை நன்னெறி இயக்கம் தமிழக முழுதுமட்டுமன்று தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் பரவிவருகிறது; வள்ளலார் பெயரால் ஆங்காங்கே மன்றங்கள் தோன்றிப் பணிபுரிகின்றன. வள்ளலாரின் அருட்பாக்கள் உலகம் முழுதும் பரவும் நாள்