பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

53


கெடிலத்தின் வழியாக மேல் நோக்கி எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார் என்பது தெரிகிறது. அப்பர் கடற்கரையில் வந்து கரையேறவில்லை; கடலிலிருந்து மேல் நோக்கிக் கெடிலம் ஆற்றிற்கு வந்து அந்த ஆற்றின் கரையிலே தான் கரையேறினார் என்பதற்குக் ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் தெளிவான சான்று உள்ளது. அந்நூலில் - கரையேற விட்ட படலத்திலுள்ள

"கல்லதுவே சிவிகையதாக் கடலரசன் காவுவோனாச்
சொல்லரசர் மீதேறித் துனிநடத்தி வரவெதிர்ந்தே
மல்லலவன் மனைக்கெடில மாதுமொரு புடைதாங்கு
அல்லல்சிறி தவற்ககற்ற அவள்சார்புங் கொண்டுய்த்தார்

என்னும் (54) பாடலில், சொல்லரசராகிய அப்பர் கெடிலம் என்னும் மாதின் சார்புங் கொண்டு கரையேறினார் என்று கூறப்பட்டிருப்பது காண்க, மேலும் இப்புராணத்தில், கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப் பாளையத்தை ஒட்டிக் கெடிலம் ஓடியது என்னும் கருத்து பலவிடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்நூலின் தலவிசேடப் படலத்திலுள்ள

"தென் திசையில் கங்கையெனத் திகழ்கெடிலப்
பூம்புனலே தீர்த்தமாமால்"(7}
"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே
விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே
அமர்ந்தன் பர்க்கு (17}


என்னும் பாடல் பகுதிகளில், கரையேறவிட்ட நகரின் தீர்த்தம் கெடிலம் எனக் கூறப்பட்டிருப்பது காண்க.

தெளிவிற்காக முன்பக்கத்தில் (பக்கம் 51) உள்ள கோட்டுப் படத்தைப் பார்த்தால் நிலைமை புரியும். அதுதான் கெடிலத்தின் பழைய பாதை. ஆற்றின் வடகரையில் கரையேற விட்ட குப்பம் இருப்பதையும் அதற்கும் வடக்கே திருப்பாதிரிப் புலியூர் இருப்பதையும் காணலாம்.

கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் அந்தக் காலத்தில் கெடிலம் ஓடிற்று என்பதற்கு இயற்கைச் சான்றுகளும் உள்ளன. ஆறு ஓடியதாகக் கூறப்படும் பழைய பாதையில் இப்போது சிறு சிறு ஓடைகள் பல உள்ளன. அந்தப் பகுதியில் ஒரு முழம் ஆழம் தரையைத் தோண்டினாலேயே மணல் கிடைக்கிறது. அந்தப் பாதைப் பகுதி, தன் இரு பக்கங்களிலும் உள்ள நிலப் பகுதியை நோக்கப்