பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கெடிலக்கரை நாகரிகம்


பள்ளமாயிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கெடிலத்தின் தென்கரையைத் தொட்டாற் போல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கேப்பர் மலை, இங்கேயும் அதேபோல் அதே நெருக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கேப்பர் மலை அடிவாரத்தில் இருக்கும் வடுகுப்பாளையம் என்னும் ஊருக்கும் வண்டிப்பாளையம் (கரையேறவிட்ட குப்பம்) என்னும் ஊருக்கும் நடுவே, பேருந்து வண்டி (பஸ்) செல்லும் தார்ப்பாதை மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. பெருமழை பெய்யும் போது அந்தத் தார்ப்பாதை தண்ணீருக்குள் மறைந்து போக, அங்கே ஓர் ஆறு ஓடுவது போலவே தோற்றம் அளிப்பதுண்டு. ‘ஏன் இந்த இடம் இவ்வளவு தாழ்ந்திருக்கிறது?’ என்று அந்தப் பக்கத்து மக்களைக் கேட்டால், ‘முன் காலத்தில் ஆறு இந்த வழியாக ஓடிற்றாம்’ என்று சில நரைத்த தலைகளாயினும் சொல்லக் கேட்கலாம்.

வண்டிப்பாளையத்திற்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பாதிரிக்குப்பம் என்னும் ஊரில், முத்தால் நாயுடு என்னும் முதியவரை ஒருநாள் தற்செயலாகக் கண்டபோது கெடிலத்தின் போக்கைப் பற்றி வினவ, அவர் கூறிய விடையாவது:

‘அந்தக் காலத்தில் கெடிலம் வண்டிப்பாளையம் வழியாக ஓடியது உண்மைதான்! நான் இளமையாய் இருந்தபோது அந்தப் பக்கம் தந்திக் கம்பம் நடுவதற்காகப் பலருடன் நிலத்தைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஒருநாள் ஓரிடத்தில் நிலத்தின் அடியில் மரத்தின் பகுதிகள் பாறையாக மாறிக்கிடக்கக் கண்டோம். அந்தக் காலத்தில் இங்கே ஆறு ஓடிற்று; ஆற்று வெள்ளத்தால் மரங்கள் மண்ணுக்குள்ளே மறைக்கப்பட்டு மடிந்து போயின என்று பெரியவர்கள் சிலர் அப்போது கூறினர்’ இது முதியவரின் பதில்.

வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் கெடிலம் அன்று ஓடியது என்பதை அறிவிக்கும் ஆணித்தரமான சான்றாக, இன்றைக்கும் அவ்விடத்தில் ‘அப்பர் கரையேறின நிகழ்ச்சி’ ஒரு திருவிழாவாகக் கொண்டாடி நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தக் காலத்திலிருந்தே நடத்தப்படுகிறதாம். அப்பர் கரையேறியது சித்திரைத் திங்கள் அனுட நாளிலாம். எனவே, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அனுட நாளில் இவ்விழா நடைபெறுகிறது. அன்றைக்குத் திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலிலிருந்து சிவபெருமான் திருவுருவமும் அப்பர் திருவுருவமும் வண்டிப் பாளையத்திற்கு எழுந்தருளும், வண்டிப்பாளையம் திருக்கோயில் முருகப் பெருமானும் இதில் கலந்து கொள்வார்.