பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கெடிலக்கரை நாகரிகம்


செயிர றுத்தெனை அக்கரை ஏற்றுதிர் சேர்ந்தோர்
அயர்வ றுக்கும்.அக் கரையேற விட்டவ ராவீர்' (41)
'கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்
வடதி சைக்கணே மன்னுவித் துமைக்கொடு போதும்
புடவி தன்னிடைத் தாள்துணை ஊன்றியே போந்து
கடவுள் ஆலயம் கண் ணுறீஇ வழிபடும் என்றார் (45)
'அட்ட சித்தியும் புரிகுவோ மாதலி னுமக்காம்
இட்டம் யாவையும் செய்குது மெனவுரைத் திரைத்த
மட்டு வார்புனல் வடதிசை மருவவேத் திரத்தால்
தொட்டு நீக்கினர் அவ்வழி யேகின துனைநீர்’ (47)
'அன்ன ராமிரு முனிவரர்க் கபயமீந் தப்பான்
மன்னு தீம்புனல் வடதிசை மருவிடப் புரிந்து
முன்ன மேகிப்பின் வருவருள் செய்தனர் முனியைப்
பன்னு சித்தர்பின் மாணிக்க வாசகர் படர்ந்தார்.' (49)

[1]திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லையெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் பெரிய புராணமும் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ணவேண்டிவரும். இதைத் தெளியவைக்கு முகத்தான், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசைமாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கை யில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், கெடிலம் பெருவெள்ளத்


  1. 45. பாடலேச்சுரன் நிகேதனம் - பாடலேச்சுரர் கோயில். 47. வேத்திரம் - பிரம்பு.