பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கெடிலக்கரை நாகரிகம்


கருதப்படுகிறது. இந்தக் கூடலூர் என்னும் பெயர்தான் கடலூராக மாறியிருக்கவேண்டும் எனவும் எண்ண இடமளிக்கிறது. கூடல் என்றால் ஒரு கூடல் அன்று இரண்டு கூடல் அன்று இங்கே நான்கு கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவையாவன:

கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறு கடலோடு கலக்கும் இடத்தில், தெற்கேயுள்ள சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் ஆறுவந்து உப்பனாற்றோடு சேர்ந்து கடலில் கலக்கிறது. எனவே, உப்பனாறு கடலோடு கூடுவது ஒரு கூடல் பரவனாறு கடலோடு கூடுவது இரண்டாவது கூடல்; உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடுவது மூன்றாவது கூடல், உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடுவது நான்காவது கூடல் - என நான்கு கூடல் நிகழ்கின்றன. சுருக்கிச் சொன்னால், இந்த நான்கு கூடல்களும் ஒரே கூடல்தான்; அதாவது, உப்பனாறும் பரவனாறும் ஒரே இடத்தில் இணைந்து கடலோடு கலக்கின்றன. கீழுள்ள படத்தில் இந்தக் கூடலைக் காணலாம்.

ஆறுகள் கூடும் இடத்திற்கு நேரே சிறிது தொலைவில் கப்பல்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். கூடலூர்த் துறைமுகத்தில் படகுகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குள் புகுந்து கப்பலில் சரக்குகளை இறக்கும்; அதேபோல், கப்பலிலிருந்து சரக்குகளை யேற்றிக்கொண்டு கடலிலிருந்து உப்பனாற்றுக்குள் புகுந்து வந்து உப்பனாற்றங்கரையிலுள்ள துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும். இந்த ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளில் பரவனாற்றுக்குப் பங்கு கிடையாது; அதில் ஒன்றும் நிகழவில்லை.