பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் கலக்குமிடம்

77


உப்பனாறும் பரவனாறும் கூடுகிற இடத்திலே இரண்டு ஆறுகட்கும் நடுவில் ஒரு கி.மீ. நீளமுள்ள அணைபோன்ற தடுப்பு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பு, _j போன்ற வளைவுடன், மேலே வண்டி செல்லும் அளவுக்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளும் இணைந்து கடலிலே கலக்கும் முடிவிடம் வரையிலும் இந்தத் தடுப்பு இல்லை. குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடுகிறது. இந்தத் தடுப்பின்மேல் நின்று கொண்டு பார்த்தால் வடக்கே உப்பனாறும், தெற்கே பரவனாறும், கிழக்கே இரண்டு ஆறுகளும் சேர்ந்தபடி கடலிலே கலக்கும் முகத்துவாரமும் தெரிவது வியத்தகு கவின் காட்சியாகும்.

தண்ணிருக்கு நடுவே ஊடுருவி அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புப் பாதை இல்லாவிடின், இவ்வளவு அண்மையில் நெருங்கிச் சென்று நான்கு கூடல்களுக்கும் நடுவில் நின்று கொண்டு இந்தக் கண்கொள்ளாக் காட்சியை நுகர முடியாது. உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குப் படகுப் போக்குவரவு நடைபெறுவதால், பரவனாறு மண்ணைக்கொண்டு வந்து உப்பனாற்றில் நிரப்பிப் படகுப் பாதையைத் தூர்த்துவிடாமல் இருப்பதற்காக, இரண்டு ஆறுகட்கும் இடையே இந்தத் தடுப்பு அமைக்கப்பட்டதாம். படகின் துணையின்றி, உந்து வண்டி (கார்) போன்ற ஊர்திகளின் துணைகொண்டு முகத்துவாரப் பகுதியை நெருங்கவும் உதவுகின்ற இந்தத் தடுப்பு பல நோக்கப் பயன் உடையதாயிருக்கிறது. முன்பக்கத்திலுள்ள படம், இந்தத் தடுப்பின் மேல் நீண்டதொலைவு சென்று நின்று கொண்டு எடுத்த படமே. படத்தில் நம் இடக்கைப் பக்கம் தெரிவதுதான் தடுப்பு.