பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. கெடிலம் - பெயரும் காரணமும்

இந்த ஆறு பழைய இலக்கியங்களில் ‘கெடிலம்` என அழைக்கப்பட்டுள்ளது. அப்பர் தேவாரம், பெரியபுராணம், அருணகிரியார் திருப்புகழ், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலிய நூல்களில் ‘கெடிலம்’ என்னும் சொல்லுருவமே காணப்படுகிறது. ஆனால், இப்போது உலக வழக்கில் ‘கடிலம்’ என்று சிலர் அழைக்கின்றனர். அரசினரின் வெளியீடான ‘Madras District Gazetteers South Arcot’ (1962) எனும் ஆங்கில நூலில் ‘gadilam என்று காணப்படுகிறது, இந்த ஆங்கிலச் சொல்லுருவத்தைத் தமிழில் ‘கடிலம்’ என்று ஒலிக்க வேண்டும். ஒருசார் உலக வழக்கையொட்டி இந்த வெளியீடு ‘கடிலம்’ என்று பெயர் சொல்லுகிறது போலும்.

பல நூற்றாண்டுகட்குமுன் தொல்காப்பியத் தேவர் என்பவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் கெடிலம், கடிலம் என்னும் இரண்டு சொல்லுருவங் களும் காணப்படுகின்றன. இச் செய்தி அந்நூலில் உள்ள

'ஐயர் திருக் கெடிலம் ஆட்டி’
(13)
'கடிலமா நதியதன் வடபால்’
(45)
'மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’
(100)

என்னும் பாடற் பகுதிகளால் தெரியவரும். பழைய நூல்களெல்லாம் கெடிலம் என்றே ஒருமித்துக்கூற, ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் மட்டும், அந்த உருவத்தோடு கடிலம் என்னும் உருவத்தையும் கலந்து பயன்படுத்தியிருப்பதேன்?

ஒருவேளை, தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தின் நாற்பத்தைந்தாம் செய்யுளிலும் ‘கெடில மாநதி’ என்றே எழுதியிருக்கவும், அவருக்குப் பின்னால் ஏடு பெயர்த்து எழுதியவர்கள் ‘கெ’ என்னும் எழுத்திலுள்ள ‘ ௳ என்னும் கொம்பைக் கை தவறுதலாக விட்டுவிட்டுக் கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பார்களோ? அல்லது, ஆசிரியரே, கடிலம் - கடிலம் என ஒலித்துப் பேசும் வழக்கத்தாலோ அல்லது கை தவறுதலாகவோ அந்தப் பாட்டில் ‘கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பாரோ? அல்லது, இருவகையான வழக்குகளும் உள்ளன என்பதை அறிவிக்க வேண்டும் என்னும்