பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

79


கொள்கையுடன், கடிலம், கெடிலம் என்னும் இரண்டு உருவங்களையும் வேண்டுமென்றே ஆசிரியர் பயன்படுத்தி யிருப்பாரோ? இரண்டு உருவங்களுள் எது சரியானது?

தொல்காப்பியத் தேவர் 45 ஆம் பாடலில், ‘கமலம்’ என எழுதியிருப்பதற்குப் பொருத்தமான ஓர் அமைதி (சமாதானம்) கூற முடியும். ஈண்டு அப் பாடலின் இரண்டாவது அடி.’ முழுவதையும் நோக்க வேண்டும்.

"கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்"

என்பது பாடலின் இரண்டாம் அடி. இவ்வடியினை, ‘கைத்தலத்து’ என ‘கை’ என்னும் எழுத்தில் தொடங்கி யிருப்பதால், அதற்கு மோனைச் சொல்லாக, ‘கடில மாநதி’ என ‘க’ என்னும் எழுத்தில் சொல்லைத் தொடங்கியமைத்துள்ளார் ஆசிரியர். அ, ஆ, ஐ, ஒள என்னும் நான்கும் சொற்களின் முதலில் ஒத்துவருவது மோனையன்றோ ? இங்கே ‘கெடிலம்’ என எழுதிவிடின், ‘ஐ'யும் ‘எ'வும் அதாவது ‘கை'யும் ‘கெ’ வும் மோனையாக ஒத்துவர முடியாது. இதனை,

[1]"அகரமோடு ஆகாரம் ஐகாரம் ஔவாம்,
இகரமோடு ஈகாரம் எஏ

என்னும் மோனையிலக்கணப் பாடலால் அறிக. ஆயின், மோனைப் பொருத்தத்திற்காகக் கெடிலத்தைக் கடில மாக்குவதா? ‘குல்லாய்’ கொள்ளவில்லை என்பதற்காகத் தலையைச் செதுக்கலாமா? இதிலிருந்து தெரிவதாவது:மோனைப் பொருத்தத்திற்காக வலிந்து கெடிலத்தைக் கடிலமாக்கியிருக்க முடியாது. ‘கடிலம்’ என்னும் வழக்காறும் மக்களிடையே உள்ளதாலேயே தொல்காப்பியத் தேவர் துணிந்து ‘கடிலம்’ என்னும் சொல்லுருவத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் எப்போதுமே போட்டியிருந்து கொண்டு வருகிறது. இந்த ஆறு இருக்கட்டும். கங்கை ஆற்றை எடுத்துக் கொள்வோம். அது ‘கெங்கை’ எனவும் பெயர் வழங்கப்படுகிறது. ஆறுகளின் பெயர்கள் இருக்கட்டும். கயாதரர் என்னும் புலவர் கெயாதரர் எனவும், அவரியற்றிய கயாதரம் என்னும் நூல் கெயாதரம் எனவும் இரண்டு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். சுந்தகம் கெந்தகம் எனவும், கஜமுகன் கெஜமுகன் எனவும்,


  1. யாப்பருங்கலக் காரிகை - உரை.