பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கெடிலக்கரை நாகரிகம்


கடிகாரம் கெடிகாரம் எனவும், இவை போல் இன்னும் பல பெயர்களும் வழங்கப்படுவது கண்கூடு. ‘பல்லு குச்சைப் பல்லிலே போடப் பன்னிரண்டு மணி ஆய்விட்டது’ என்னும் தொடரை, ‘பெல்லு குச்சியெ பெல்லுலே போட பென்னண்டு மணி ஆயிட்டது’ எனச் சில ஊர் மக்கள் கொச்சையாக ஒலித்துப் பேசுகின்றனர். இப்படியே இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டலாம். ‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் இடையே நடந்து வரும் நீண்ட காலப் போராட்டம் இப்போது புலனாகுமே!

அங்ஙனமெனில், கடிலம் என்பது கெடிலம் என மாறியதா? அல்லது, கெடிலம் என்பதுதான் கடிலம் என்றாயிற்றா? இதற்குத் தீர்ப்பு வழங்குவது அரிது. முற்கூறிய எடுத்துக் காட்டுகளைக் கொண்டு தீர்ப்பு கூறப்புகின், கங்கை கெங்கையானது போல், கஜமுகன் கெஜமுகனானது போல், பல்லு குச்சு பெல்லு குச்சாக மாறியது போல், கடிலம் என்பதுதான் கெடிலமாக மாறியிருக்க வேண்டும் என எளிதில் சொல்லிவிடலாம்போல் தோன்றும். ஆனால், பெரியோர்களின் இலக்கியங்களில் ‘கெடிலம்’ என்ற உருவமே ஆட்சி பெற்றிருப்பது ஆழ்ந்து நோக்கற்பாலது.

கெடிலம் என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் பொருள் கூறுவதை நோக்குங்கால், கெடிலம் என்ற பெயரே சரியானது என்று தோன்றுகிறது. கெடிலம் என்னும் சொல்லுக்கு, ‘ஆழமான ஊற்று ஓடை’ என்னும் கருத்துப்படப் பொருள் சொல்லப்படுகிறது. இந்த ஆற்றைக் கடிலம் (Gadilam) எனவே எல்லாவிடங்களிலும் குறிப்பிடும் அரசாங்க விவரத் தொகுப்புச் சுவடி (Gazetteer) [1]ஓரிடத்தில் பின்வருமாறு எழுதுகிறது:-

- In ancient days it (Gadilam) was called the Kedilam meaning a deep gulf.”-

“பழங்காலத்தில் கடிலம் ஆறு ‘கெடிலம்’ என அழைக்கப்பட்டது; கெடிலம் என்றால் ‘ஆழமான நீர் ஓட்டம்’ என்பது பொருள்”. இது மேலுள்ள ஆங்கிலப் பகுதியின் கருத்து. இந்த ஆறு முன்பு கெடிலம் என அழைக்கப்பட்டதாகவும், இப்போது கடிலம் என அழைக்கப்படுவதாகவும் அரசாங்க வெளியீடு அறிவிக்கிறது. இது, கெடிலம் என்னும் சொல்லுக்கு deep gulf எனப் பொருள் கூறியுள்ளது, ‘deep’ என்பதற்கு ‘ஆழமான’ என்பது பொருள். ‘gulf’ என்பதற்கு, வளைகுடா,


  1. South Arcot District Gazetteer - Chapter I - Physical and General Description - Page 7.