பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

87


போலத்தான், அவர்கள் அழைத்த ஆற்றின் பழைய பெயருக்கும் காரணம் கூறமுடியாது. ஒர் ஆற்றின் பெயருக்குக் காரணப் பொருள் விளக்கம் கூறமுடியாதிருப்பதே, அந்த ஆறும் அந்தப் பெயரும் மிகமிகப் பழமையானவை என்பதற்கு ஒரு தக்க சான்றாகும்.

அன்றியும், ஒர் ஆற்றிற்குப் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதும் உண்டு; இருப்பினும், எல்லோரும் அறிந்த எல்லாராலும் வழங்கப்படுகிற பொதுப்பெயர் ஒன்றும் அந்த ஆற்றிற்கு இருக்கும். ஆறு ஓடிவரும் வழியில் உள்ள ஊர்களின் பெயரால் ஆற்றின் பெயர் அழைக்கப்படுவதும் உண்டு. செஞ்சி வட்டத்திலிருந்து தோன்றி வருவதும் சங்கராபரணி என்றும் வராகநதி என்றும் அழைக்கப்படுவதும் ஆகிய செஞ்சியாறு, வில்லியனூர் என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘வில்லியனுர் ஆறு’ என்றும், திருக்காஞ்சி என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘திருக்காஞ்சியாறு’ என்றும் வெளியூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. அதனையே, புதுச்சேரிப் பக்கத்தில் சுண்ணாம்பு ஆறு - கிளிஞ்சல் ஆறு என்றெல்லாம் அழைக்கின்றனர். இது போலவே, கெடிலம் கருடநதி என்று அழைக்கப்படுவதல்லாமல், திருவதிகைப் பக்கம் வரும்போது ‘திருவதிகை ஆறு’ என்றும் திருவயிந்திரபுரம் பக்கம் வரும்போது திருவயிந்திரபுரம் ஆறு’ என்றும் வெளியூர் மக்களால் இன்றும் அழைக்கப்படுகிறது. திருவதிகை அல்லது திருவயிந்திரபுரத்தில் உள்ள மக்கள் கெடிலத்தை வறிதே ஆறு என்றோ அல்லது ‘நம்மூர் ஆறு’ என்றோ குறிப்பிடக்கூடும். ஆனால், எல்லா ஊர்க்காரர்களுமே கெடிலம் என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடுவர். எனவே, கெடிலம் என்பதுதான் அந்த ஆற்றின் பழைய இயற்பெயராய் இருக்க முடியும். ஒர் ஆற்றின் பழைய இயற்பெயர்தான், பெரும்பாலான இலக்கியங்களிலும் பெரிதும் இடம் பெற்றுப் பொதுமைப் பெருமை அடைந்திருக்க முடியும். கெடிலத்தைப் பொறுத்த வரையில், பழைய இலக்கியங்களிலிருந்து புதிய இலக்கியங்கள் வரையும் பெரும்பாலும் கெடிலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. எனவே, கெடிலம் என்பதை, அந்த ஆற்றின் முதல் தமிழ்ப் பெயர் எனத் துணிந்து கூறலாம்.

கெடிலம் என்னும் தமிழ்ப் பெயருக்கு என்ன பொருள் விளக்கம் கூறுவது? கெடிலம் என்றால் ஒர் ஆறு என்னும் பொருளோடு தமிழ் அகராதிகள் அமைந்துவிட்டன. ஓர் ஆறு என்பது தவிர்த்து வேறு பொருள்கள் எல்லாம் வின் சுலோ கூறுபவை. அவர் வடமொழிச் சொல் எனக் கொண்டு