பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கெடிலக்கரை நாகரிகம்


என்பதையும் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு, ‘கா என்றால் சோலை; வேரி என்றால் தேன்; காவேரி என்றால் சோலையில் தேன் பெருகப் பாய்ந்து வளப்படுத்தும் ஆறு - சோலைத் தேனுடன் பாய்ந்து வரும் ஆறு’ என்றெல்லாம் பொருள் கூறுகின்றனர்.

இப் பெயர்க் காரண விளக்கங்களைப் பார்க்கும்போது, காவிரி, காவேரி என்பவற்றில் எது உண்மையான பெயர்? அப் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்துத் திட்ட வட்டமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்ப நிலையே நிலவுகிறது. காவிரியைப் பற்றியே இப்படியென்றால், கெடிலத்தைப் பற்றி என்ன கூறுவது? எனவே, கெடிலத்தைப் பற்றித் திட்டவட்டமான பெயர்க்காரணம் ஒன்றும் கூறவியலாது என்பது தெளிவு.

கெடிலத்திற்குப் பெயர்க் காரணம் கூறமுடியாது என்று தெரிவிப்பதற்கு இத்தனை பக்கம் எழுதியது ஏன்? கெடிலம் என்பதை வடமொழிச் சொல்லாகக் கொண்ட வின்சுலோ அகராதியால் ஆராய்ச்சியாளரிடையே விளையக் கூடிய குழப்பத்தைத் தெளிவு படுத்தவே இவ்வளவு வேண்டியதாயிற்று.

கருடநதி

கெடிலத்திற்குக் ‘கருடநதி’ என்னும் மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. இப்பெயர் ஏற்பட்டதற்கு இரண்டு இடங்களில் இரண்டு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன. முதலிடத்து முதற்காரணமாவது:

கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் - மையனூரில் ஒரு மலையின் அடியில் - ஒரு பாறையிலுள்ள ஒரு சுனையி லிருந்து தோன்றுகிறது என முன்னர்க் கண்டோம். கெடிலம் தோன்றும் பாறையின் பெயர் ‘கருடன் பாறை’ என்பதாகும். கருடன் பாறையிலிருந்து தோன்றும் நதி ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாக அந்தப் பக்கத்து மக்கள் கூறுகின்றனர். கருடன் பாறையின் தோற்றம் கருடன் அலகு (மூக்கு) போல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அப்படியொன்றும் தெளிவாகத் தெரியாவிடினும் முன்னொரு காலம் அப்படியிருந்திருக்கலாமோ - பின்னர் நாளடைவில் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாமோ - என்னவோ! அந்தப் பாறைப் பகுதியில் கருடப் பறவைகள் நிரம்பத் தங்கியிருந்ததால் ‘கருடன் பாறை’ என்ற பெயர் வழங்கப் பட்டும் இருந்திருக்கலாமே!