பக்கம்:கேரக்டர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

கார் டிரைவர், அவரிடம் வந்து சம்பள உயர்வு கேட்டால், "போடா முட்டாள், அம்மாவைப் போய்க் கேளுடா" என்பார்.

சாம்பசிவத்திற்கு அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எந்த விவகாரமும் தெரியாது. எல்லாம் அந்த அம்மாளுடைய 'மானேஜ்மெண்ட்'தான்.

"என் 'ஒய்ப்' இருக்காளே, ரொம்ப சாமர்த்தியம். நாலாவது பாரம் வரை படிச்சிருக்காள். இங்கிலீஷிலே அட்ரஸ்கூட எழுதுவாள்; கேஸ் கட்டெல்லாங்கூடப் படிச்சு விஷயத்தைத் தெரிஞ்சுக்கிறாள். இன்னும் கொஞ்ச நாள் போனா ஜட்ஜ்மெண்டேகூட எழுதிவைத்து விடுவாள்போல் இருக்கிறது..." என்பார்.

"இன்றைக்கு ஓர் இடத்திலே கல்யாணம், போயிட்டு வருவோம், வறேளா?" என்பாள் ஜானகி அம்மாள். ஸ்ப்ஜட்ஜ் பதில் பேசாமல் மனைவியுடன் புறப்பட்டுச் செல்வார். கலியாண வீட்டில் எல்லாரும் ஜானகி அம்மாளைத்தான் விசாரிப்பார்கள். ஜானகி அம்மாள் தன் ஹஸ்பெண்டை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாள். கலியாண வீட்டிலிருந்து மறுபடியும் வீடு திரும்பப் போகும் நேரம் சாம்பசிவத்துக்குத் தெரியாது, மனைவி எப்போது புறப்படப் போகிறாள் என்பதை தெரிந்துகொள்ள அடிக்கொரு தடவை மனைவி இருக்கும் திக்கை ஜாடையாக கவனித்துக் கொண்டிருப்பார். கடைசியில், "புறப்படலாமா? கார் டிரைவரைக் கூப்பிடுங்கோ" என்பாள் ஜானகி அம்மாள்.

"யாரது, உங்களைத்தானே, இன்றைக்குச் சபாவிலே சங்கீதக் கச்சேரியாம். போவோம் வறேளா?" என்பாள் ஜானகி அம்மாள்.

"சங்கீதமா? அதெல்லாம் எனக்கொண்ணும் அவ்வளவா தெரியாது..."

"பரவாயில்லை, வாருங்கோ, எனக்கு யாரும் துணை இல்லே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/103&oldid=1481081" இலிருந்து மீள்விக்கப்பட்டது