பக்கம்:கேரக்டர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'எதிர்வாதம்' ஏகாம்பரம்

"ஏகாம்பரம் பேப்பரில் பார்த்தயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம்.காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி வரைக்கும் நடந்ததாம். தெரியுமா உனக்கு?"

"சரிதாண்டா, இதைப் போய் ஒரு பெரிய அதிசயமாகச் சொல்ல வந்துட்டே! சினிமா ஸ்டார்தானேடா? செலவழிக்கட்டுமே: நானும்கூட சினிமா ஸ்டாராக இருந்தா பத்தாயிரம் பேர் என்ன, பத்து லட்சம் பேருக்குச் சாப்பாடு போடுவேன். அந்தக் கல்யாணத்திலே எத்தனை பேர் சாப்பாடு இல்லாம திரும்பிப் போனாளாம், தெரியுமா?" என்று வந்தவரை மடக்கி விடுவார் ஏகாம்பரம்.

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலையைப் போட்டபடியே தெருவில் போவோர் வருவோரை எல்லாம் அழைத்து அவர்களுடன் வம்பளப்பதுதான் அவருடைய தினசரி வேலை.

"தெரியுமா சேதி? சீனிமா ஸ்டார் வீட்டுக் கல்யாணத்தில் ஒரே கலாட்டாவாம், ரொம்ப பேர் சாப்பிடாமலே திரும்பிப் போய்விட்டாளாம்" என்று சொல்லிக்கொண்டு வருவார் இன்னொருவர்.

"ஆமாம். ஏதோ முடிந்தவரைக்குந்தானே போடுவாங்க. சினிமா ஸ்டார்னா அதுக்காக எவ்வளவு பேருக்குத்தான் சாப்பாடு போட முடியும்? போய்யா, வேறே வேலையில்லே?" என்று அவரையும் மடக்கி அனுப்பிப்பார் ஏகாம்பரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/125&oldid=1481163" இலிருந்து மீள்விக்கப்பட்டது