பக்கம்:கேரக்டர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

"நூறு பதினைஞ்சு ரூபாய்ன்னு போட்டுண்டு தள்ளி விடுடா; உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்!"

"கமிஷனா? உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு, கமிஷனும் கிமிஷனும்?"

ஆனால், வக்கீல் வீட்டில் நூறு பதினெட்டு என்று விலை சொல்லி, ஆயிரம் காய்களையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் பதினாலு ரூபாய் என்று சொல்லி அதில் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான். கடைசியில் வக்கீல் வீட்டுக் கலியாணத்தில் மிஞ்சிய தேங்காய்களை வேறொரு கலியாண வீட்டில் கொண்டுபோய் விற்று, அதிலும் பத்து ரூபாய் கமிஷன் பார்த்துக்கொள்வான்.

"ஏண்டா குப்பண்ணா! இப்படியே எத்தனை நாளைக்குத் தான் காலம் தள்ளப் போகிறாய்? ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ?” என்று யாராவது கேட்டால் "எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம்? நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு? என்பான். ஆனால், அவன் புது வியாபாரம் ஆரம்பிக்காததற்குக் காரணம் அதுவல்ல; தன்னுடைய வியாபாரத்தில் வேறு எவனாவது கமிஷன் அடித்துவிடப் போகிறானே என்பது தான் அவனுக்குள்ள பயம்!




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/144&oldid=1481414" இலிருந்து மீள்விக்கப்பட்டது