பக்கம்:கேரக்டர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மூணு சீட்டு முத்தண்ணா

தம் தலையணைக்கு அடியில் வைத்திருக்கும் சீட்டுக்கட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்ட பிறகுதான் முத்தண்ணா தினமும் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருப்பது வழக்கம்.

'சீட்டாட்டம் என்னது பொழுது போக்குக்காக ஏற்பட்ட ஒரு விளையாட்டு' என்றே அவர் எண்ணுவதில்லை. 'மனிதன் பிறப்பதே சீட்டாடுவதற்காகத்தான்; பணத்தைச் சம்பாதிப்பதே சீட்டாடுவதற்காகத்தான்' என்பது அவர் நினைப்பு.

எல்லா ஆபீஸ்களிலும் வேலை நேரத்தைக் குறைத்து, சீட்டாடும் கிளப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டுமென்பது அவர் கருத்து. ஒவ்வொரு சமயம் தாம் ஏன் பள்ளிக்கூட வாத்தியாராகவோ, வக்கீலாகவோ போயிருக்கக் கூடாது என்று எண்ணி வருத்தப்படுவார். காரணம்: அந்த உத்தியோகங்களில் ‘சம்மர் வெகேஷ'னும் சேர்ந்து அதிக நாட்கள் லீவு கிடைக்குமல்லவா? லீவு நாட்களில் சீட்டாடுவது போதாதென்று, இரவு நேரங்களிலுங்கூட ஆடுவார். ஆபீசில் டிபன் சாப்பிடுவதற்காக விடும் 'இண்டர்வல்' நேரத்தை வீணாக்க மனமின்றி அப்போதும் இரண்டு ஆட்டம் போடுவார்.

ஆபீஸுக்குப் புறப்படும்போது 'பைல்' கட்டை எடுத்துக் கொள்ள மறந்தாலும் சீட்டுக் கட்டை எடுத்துக்கொள்ள அவர் ஒரு நாளும் மறக்கமாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/30&oldid=1478898" இலிருந்து மீள்விக்கப்பட்டது