பக்கம்:கேரக்டர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கொண்டு பல தொழிலதிபர்களுடன் கடிதப்போக்குவரத்து நடத்தி வருகிறார். குப்பண்ணாவிடம் உள்ள முதலெல்லாம் பேச்சுத் திறமை தான். அவர் இங்கிலீஷ் பேசினால் பியானோ வாத்தியம் போல. அவ்வளவு இனிமையாயிருக்கும். ஆங்கில மொழியை அழகாசுப்பேசுவதில் 'ஸில்வர் டங்' சீநிவாச சாஸ்திரியாருக்கு அடுத்தபடி தாம்தான் என்பது குப்பண்ணாவின் எண்ணம்!

"கடிகாரத் தொழிற்சாலை சம்பந்தமான பேப்பர் ஒன்று இண்டஸ்ட்ரீஸ் அண்டு காமர்ஸ் டிபார்ட்மெண்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதை மெல்லக் கிளப்பி, பைனான்ஸ் டிபார்ட்மெண்டுக்குத் தள்ளிவிட்டு வரவேண்டும். அதற்காகத் தான் இப்போது டில்லிப்பயணம். அதை முடித்துவிட்டு அங்கிருந்து கல்கத்தாவுக்குப் போய்ச் சட்டர்ஜியைப் பார்த்து ஷேர் சேர்க்கும் விஷயமாகப் பேசவேண்டும். அகமதாபாத்தில் தொழற்சாலை தொடங்க இடம் தருவதாக ஒரு குஜராத்திக்காரர் சொல்லியிருக்கிறார்."

இப்படி வருஷம் முழுவதும் ஓயாமல் ரயில் பிரயாணம் தான். அதுவும் மூன்றாம் வகுப்பு அப்பர் பர்த்துத்தான்! தொழிற்சாலை ஆரம்பித்துவிட்டால் அப்புறம் கவலையில்லை. கம்பெனிச் செலவில் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்யலாம்.

குப்பண்ணா ஊருக்குப் போவதென்றால் ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன் கூட்டியே ஸ்டேஷனுக்குப் போய் எப்படியாவது அப்பர் பர்த்தைப் பிடித்துவிடுவார். உடனே ஹோல்டாலைப் பிரித்துப்போட்டு அந்த இடத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டு விடுவார். சற்று நேரத்தில் அவருடைய செருப்புகளைத்தவிர மற்றச் சாமான்களெல்லாம் மேலே போய்விடும். ரயில் நகர்ந்ததும் அவரும் மேலுக்குத் தாவிவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/36&oldid=1478953" இலிருந்து மீள்விக்கப்பட்டது