பக்கம்:கேரக்டர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

வண்டியில் யாராவது சண்டைக்காரர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கும் பயப்படமாட்டார், குப்பண்ணா!

சில சமயம் வடக்கத்திக்காரர்கள் இவர் அப்பர்பர்த் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது பிடிக்காமல் கோபமாகச் சண்டை போடுவார்கள். இவரும் சளைக்க மாட்டார். அவர்கள் இவருக்கு இந்தி தெரியாதென்று நினைத்து கொண்டு இவரை இந்தியில் திட்டுவார்கள். அம்மாதிரி சமயங்களில் குப்பண்ணா சற்று நேரம் இந்தியே புரியாதவர்போல் புன்சிரிப்புடன் மௌனமாக இருப்பார்.

பிறகு வண்டியிலுள்ள தமிழர்களிடம், "இந்த மடையன்கள் எனக்கு இந்தி தெரியாதென்று நினைத்துக்கொண்டு என்னை கண்டபடி திட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது பாருங்கள். இந்தியிலே பேசப் போகிறேன். அப்படியே அவறப்போகிறான்கள்!" என்பார்.

இரவு பதினொரு மணிக்குமேல் அந்தக் கம்பார்ட்மெண்டில் யாராவது சத்தம் போட்டுச் சீட்டாடினால் அவர் சும்மா இருக்க மாட்டார்.

"கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கள். சார்! தூங்க வேண்டும்" என்பார்.

"இது முதல் வகுப்பு இல்லை, மூன்றாம் வகுப்பு" என்பார்கள் அவர்கள்.

"மூன்றாம் வகுப்பென்றாலும் அதற்காகச் சத்தம் போட வேண்டுமென்று கட்டாயமில்லை, சார். நீங்க பேசறதை நிறுத்த போறீங்களா? அல்லது, நான் ரயிலை நிறுத்தட்டுமா?" என்று ஒரு போடு போடுவார் அவர். அப்பர் பர்த் குப்பண்ணாவா கொக்கா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/39&oldid=1478959" இலிருந்து மீள்விக்கப்பட்டது