பக்கம்:கேரக்டர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

"அப்புறம், ஸீலிங் ஃபேன் போட்டுக்குடுங்க. காத்தே வரவேன்னு வாதாடினான்" வக்கீல் பாருங்க!

"வெய்ய நாள்லே, பீச்சிலேயே காத்து வல்லயே, அதுக்கு என்ன செய்றதுன்'னேன். அதெல்லாம் முடியாதுன்னான்.

"சரி; ஸீலிங்பேனும் வாங்கிப் போட்டுக்க; வாடகையிலே கழிச்சுக்கோ'ன்னேன், மழை நாள் வந்தது. தாப்பாள் சரியில்லேன்னான். மழை பேஞ்சா இம்பீரியல் பாங்க் தாப்பாக்கூடத் தான் பிஞ்சுக்குது. வேணும்னா புதுத் தாப்பா ஒண்ணு வாங்கி போட்டுக்க! வாடகையிலே கழிச்சுக்கோன்னேன். அப்புறம் சமையல் ரூம்லே புகைபோக்கி இல்லே. வெச்சிக்குடுன்னான். புகைபோக்கி வைக்கறதுன்னா சும்மாவா? அம்பது, நூறு யாரு கைவுட்டு வைக்கறது?

  • புகை ஜன்னல் வழியாப் போயிடும். புகைபோக்கி வேணாம்னேன். என்னங்க நான் சொல்றது? வேறே வழியில்லேன்னா புகை, ஜன்னல் வழியாப் போய்த்தானே ஆவணும்? அதுவும் முடியாதுன்னான். சரி; நீயே புகைபோக்கி ஒண்ணு கட்டிக்க. ஆற செலவை வாடகையிலே புடிச்சுக்கோன்னேன்.

"கடைசிலே என்ன பண்ணான் தெரியுங்களா? வாடகையும் குடுக்காமெ, நோட்டீசும் குடுக்காமெ, வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டான். அது மாத்திரமா? கார்ப்பரேஷன் லேருந்து வீட்டு வரிகாரன் வந்தப்போ, 'வாடகை நூறுரூபாய் கொடுக்கிறேன். வீட்டுக்காரர் ரசீது கொடுக்கறதில்லே'ன்னு வேறே சொல்லிட்டுப் போயிட்டான். அதைக் கேட்டுக்கிட்டு கார்ப்பரேஷன்காரன் வீட்டு வரியை ஒசத்திட்டான். என்னங்க செய்யறது? இந்த வீடுங்களை வெச்சுக்கிட்டு ரொம்ப பேஜாரா இருக்குதுங்க. அரை வட்டிகூடக் கட்டலீங்க.

"அந்தப் புரசவாக்கம் வீடு என்னமாதிரி வீடு தெரியுங்களா? வெய்ய நாள்ளே, வீட்டுக்குள்ளே உட்கார்ந்துட்டா சும்மா ஊட்டி மாதிரி ஜிலு ஜிலுன்னு இருக்குங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/63&oldid=1479445" இலிருந்து மீள்விக்கப்பட்டது