பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


எங்கே உட்கார்ந்து ஆடினாலும், ஆடுவதற்கு முன்னும் ஆடும் பொழுதும் எப்படி அமர்ந்து ஆட வேண்டும் என்பதை, ஆட விரும்பும் அனைவரும் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாற்காலியில் அமரும்பொழுதே, தனக்கு வசதியான முறையில் அமரும் இடம் இருக்கிறதா என்பதை முதலில் கண்டுகொள்ள வேண்டும்.

ஆசனத்தின் உயரம் போதுமா, அப்படி இப்படி அசைகிறதா, முன்னாள் வர வேண்டுமா வேண்டாமா என்பனவற்றையும் உன்னிப்பாக நோக்கி, ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னே சரி செய்துகொண்டு வரவேண்டும்.

ஏனென்றால், ஆட்டம் தொடங்கி விட்டால், அந்த 'முறை ஆட்டம்’ (Board) முடியும்வரை, அப்படியே அமர்ந்து, தான் ஆட வேண்டும்.

இருக்கும் உயரம் சரியில்லை, போதவில்லை என்று நாற்காலிக்குக் கீழே கல்லோ, அல்லது கட்டையோ வைத்து உயர்த்திக் கொள்ளக்கூடாது. அதற்கு விதியும் இடந்தராது. அந்த 'முறை ஆட்டம்' முடிந்த பிறகு, வேண்டுமானால், நாற்காலியை சரி செய்து கொள்ளலாம்.

அதுபோலவே, எப்படி அமர்ந்து ஆடினாலும், தனக்கு எளிதாக இனிதாக இயல்பாக ஆட முடியும் என்றவாறு சரி செய்து கொண்டு உட்கார வேண்டும். இல்லையென்றால், முறை ஆட்டத்தின் இடையிலே அப்படி நகர்த்தால் ஆட முடியும். இப்படி அசைந்து முன்னுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பம் போல் நகர்ந்து எழ முயல்வதும், எழுவதும் தவறாகும்.