பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



பவுடர் இருந்தால் அதை நீக்கிவிட நடுவருக்குப் பூரண அதிகாரம் உண்டு. அதுபோல், குறைந்த அளவு பவுடர் இருந்தாலும், போடாமல் இருந்தாலும், போடச் செய்ய நடுவருக்கு அதிகாரம் உண்டு.

இதுபோல, பவுடரைப் போட்டுக்கொள்கின்ற உரிமை, ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர்தான் உண்டு. காய்கள் சுமுகமாக தடையின்றி நகர்வதற்காகத்தான் பவுடர் என்பதால், அதிகமாகப்போடாமலும், இல்லாமலே விட்டு விடாமலும் கவனித்து, மிதமாக இதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடுவர் ‘ஆடுங்கள்’ என்ற அனுமதி அளித்த ஆணைக்குப் பிறகும், ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதும், இடை நேரத்திலே பவுடரை மிகுதியாகப் போடுவதும், ஓரிடத்தில் பவுடர் நிறையாக இருக்கிறது என்று துடைப்பதும், துடைக்க முயல்வதும் தவறாகும்.

கையில் தள்ளினால்தானே தவறு, ஊதியோ, தள்ளியோ அல்லது மற்ற முறைகளினாலோ பவுடரை அகற்றினால் யார் என்ன செய்ய முடியும் என்றால், அதுவும் தவறுதான்.

ஆட்டப் பலகையின் பரப்பிலே கிடக்கின்ற புழுதியை, பூச்சியை, துாசியை அல்லது ஏதாவது வேண்டப்படாத பொருள் கிடந்தால்கூட, அதனை அகற்றுமாறு நடுவரிடம், தான் கூற வேண்டுமே தவிர, தானே எடுத்து எறிந்துவிட எந்த ஆட்டக்காரரும் முயலக் கூடாது. அது தவறாகும். நடுவர் தான் அதனை அகற்ற வேண்டும்.