பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23





தான் அடிப்பானை வைத்துச் சுண்டி அடிக்க இருக்கும் ‘தளக் கோட்டில்’ (Base Line) பவுடர் அதிகமாக இருந்தால், தனக்கு ‘ஆடும் வாய்ப்பு’ (Turn) வரும்பொழுது, தனது அடிப்பானை வைத்துத் தேய்த்து அகற்றி விடலாம்.

ஆனால், வேண்டுமென்றே விரல் நுனியால் பவுடரைத் தள்ளியும், துடைத்துக் கொள்வதும் தவறாகும். அப்படிச் செய்ய எவருக்குமே அனுமதியில்லை. மீறிச் செய்பவர் தண்டனைக்குட்பட்டேயாக வேண்டும்.

காய்களை அடித்தாடுவதற்குமுன், மேற்கொள்ள வேண்டிய முறைகள் அனைத்தையும் இதுவரை கண்டோம்.

மேற்கூறிய விதிகள் அனைத்தும், எளிதாகத் தோன்றினாலும், ஆட்ட நேரத்தில் ஆர்வத்தின் காரணமாக அடிக்கடி செயல்படுவதற்கு நேர்ந்துவிடும்.

ஆகவேதான், விதிகள் முழுவதையும் தெளிவாக உணர்ந்து, ஆட்ட நேரத்தில் தவறுக்குள்ளாகாமல் அதனால் தண்டனை பெறாமல், அந்தத் தண்டனையே ஆட்டத்தின் போக்கினை மாற்றிவிடாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டு ஆட்டக்காரர்கள் விளையாட வேண்டும்.

இனி, காய்களை அடித்தாடும் முறையினைக் காண்போம்.