பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27




ஒற்றையர் இரட்டையர் ஆட்டங்களில் எந்த ஆட்டமாக இருந்தாலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றற்போல், ஏதாவது ஒரு கையை ஆடப் பயன்படுத்திக் கொள்ளலாம். விரல்களும் அப்படித்தான்.

குறிப்பாக, வலதுகை ஆட்டக்காரர் தன் தளக் கோட்டுக்குப் கீழ்ப்புறத்தில் இருக்கும் காய்களை அடித்தாட வேண்டுமென்றால், தன் கட்டைவிரலைப் பயன்படுத்த வேண்டும். அதற்காக இடது கை கட்டை விரலாலும் ஆடலாம். வலது கை கட்டை விரலாலும் ஆடலாம். ஆனால் நேர்க்காயினை அடித்தாடும் பொழுது, வலதுகை விரலால் மட்டுமே ஆட வேண்டும்.

அவ்வாறு, ஒரு கையை மட்டும் பயன்படுத்தினாலும் ஆட்டப் பலகையின் ஆடும் பரப்பளவிற்குள் அவரது மணிக்கட்டுப் பகுதி வரைதான் பட வேண்டும். தொட்டும் ஆட வேண்டும். மீறி கை முழுதும் முன் வந்து ஆட்டப் பலகையில் படுவதுபோல கையை நீட்டி வைத்துக்கொண்டு ஆடுவது தவறாகும்.

மீதி கைப்பகுதியை எப்படி எங்கே வைத்துக் கொண்டு ஆடுவது என்ற சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே.

முழங்கைக்கு உட்பட்ட முன் கைப் பகுதியெல்லாம் ஆட்டப் பலகையான சட்டத்தின் (Frame) மேல் தேங்கி இருக்கலாம். ஆனால், முன்கை மற்றும் முழங்கைப் பகுதி ஆட்டப் பலகையில் வரைந்துள்ள அம்புக் குறிக்கு நேராகக் குறிக்கும் கோட்டைக் கடந்து மறுபுறம் போகாமல் இருப்பது போல கவனமாகப் பார்த்து ஆடவேண்டும்.