பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ரசனை குன்றாமல் இருக்கச் செய்யும் இந்த விளையாட்டைக் கண்காணிக்கும் அகில இந்திய கேரம் சங்கத்தில் பொறுப்பேற்று நடத்திக்கொண்டு வரும் பெரியோர்கள் தீவிர கவனம் செலுத்திக்கொண்டு வருகின்றார்கள்.

இவர்களால் அமைக்கப்பட்டு அமுலாக்கப்பட்ட விதிகளைப் பெரும்பாலும் வெளிநாடுகள் அனைத்தும் பின்பற்றுவதே இதற்குச் சான்றாகும்.

இதனால் விளையாடுபவர்கள் மாத்திரம் அல்லாமல் கண்டு களிப்பவர்களும் விதிகளை அறிந்து வைத்திருப்பது மிக இன்றியமையாததாகும்.

பலரும் படித்து அறிந்துகொள்வதற்கு வசதியாக, விதிமுறைகள் தாய் மொழியிலேயே வெளியிடும் பணி, மிக, பாராட்டத்தக்கது. நான் அறிந்த வரையில், எல்லா மாநிலத்தில் உள்ளவர்களும், அவரவர்களின் தாய்மொழியில் வெளியிட ஆர்வம் கொண்டு, ஏற்கனவே அப்பணியில் ஈடுபட்டிருப்பது, இவ்விளையாட்டு இன்னும் அதிக அளவில் பலரைக் கவரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த வெளியீட்டின் மூலம், வெகுநாளைய தேவையான தமிழ் பதிப்பு தமிழறிந்த மக்களுக்குக் கிடைக்கிறது.

இவ்விளையாட்டில் ஈடுபட்டுள்ள பல வீரர்களும், தொடரோட்டப் போட்டியைக் கண்காணிக்கும் நடுவர்கள். சில சமயங்களில் விதிமுறைகளை அமுல்படுத்துவதில் அனுபவிக்கும் சங்கடங்கள் இந்நூலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்துடன் படிப்பார்களானால், எல்லோருமே தங்களது தரங்களை உயர்த்திக் கொள்வதற்கு மிக உதவியாயிருக்கும்.