பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் சிறந்த சிந்தனையூட்டும் நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர், அத்துடன், புகழ்மிக்க விளையாட்டு வீரரும் ஆவார்.

அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழகமெங்கும் நடைபெற்ற விளையாட்டுப் பந்தயங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி வீரராகத் திகழ்ந்தவர்.

D.P.E எனும் தமது உடலியற்கல்வி தேர்விலே, மாநிலத்திலேயே முதலாவதாக முதல் நிலையில் (Distinction with First Rank) தேறி வெற்றி பெற்றவராவார்.

கற்பனை செறிந்த கவிதைகளாக, சுவைமிகு சொல் ஓவியங்களாக, கருத்தாழ மிக்கக் கட்டுரைகளாக, கற்பாரைக் கவர்கின்ற கதைகளாக விளையாட்டு நிகழ்ச்சிகளைப் படைத்து, வரனொலி, வாராந்திர இதழ்கள் நூல்கள் மூலமாக விளையாட்டுத் துறைக்கு இவர் செய்யும் பணியை தமிழ் கூறும் நல்லுலகமே புகழ்ந்து போற்றுகிறது.

விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, தருபவராக, நடத்துனராக, பார்வையாளராகப் பெற்ற அனுபவங்களை தமது தமிழிலக்கியப் புலமையுடன், தனித்தமிழ் இலக்கிய நூல்களாக விளையாட்டுத்துறை நூல்களைப் படைக்கும் திறமைக்கு இவரது நூல்களை சான்றாகும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக விளையாட்டுக் களஞ்சியம் என்னும் மாத இதழினை விளையாட்டுத்துறைக்கென்றே வெளியிட்டு வருகிறார்.

பதிப்பகத்தார்.