10
மணியோசை கேட்கிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான இசைநயத்துடன். இந்த இசையை விரட்டும் அளவுக்கு, மின்சார இரயில் வண்டிகள் கிளப்பும் ஓசை!!
சென்னை நகரத்து மையத்தில்தானே இருக்கிறேன். நகரத்தையும் நகரமக்களையும் பார்க்க முடியாதே தவிர, நகரம் எழுப்பிடும் நாதத்தைக் கேட்கமுடிகிறது— அதிலும் இரவு நேரத்தில் தெளிவாக மின்சார ரயில் கிளப்பும் ஒலி காதிலே விழும்போதெல்லாம், ஒவ்வொரு விதமான பொருளுள்ள சொற்றொடர் நினைவிற்கு வருவதுபோல, ஒரு மனமயக்கம்! சிறுவயதுக்காரருக்கு மட்டுந்தான் அப்படி ஒரு மயக்கம் ஏற்படும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்—வயது ஆனவர்களுக்குந்தான் ஏற்படுகிறது.
5-ம் நம்பர் அறை, எனக்கு எற்கெனவே பழக்கமான இடம்; ஆமாம் தம்பி! இங்கு நான் இப்போது மூன்றாவது முறையாகத் தங்கி இருக்கிறேன்.
முன்பு தங்கியிருந்தபோது, இந்த மாடிக் கட்டிடம் முழுவதும், நமது கழகத் தோழர்கள் நிரம்பி இருந்தனர். பூட்டிவிட்ட பிறகு, அவரவர்கள் தத்தமது அறையிலிருந்தபடியே பேசிக் கொள்வதுண்டு. இம்முறை, நான் மட்டும் தான் இங்கு—நமது தோழர்களை, சிறையில் வேறோர் பகுதியில் வைத்துவிட்டார்கள். என்னுடன் இருப்பவர்கள் இருவர்—ஒரு முஸ்லீம் பெரியவர்—மற்றொருவர் செட்டி நாட்டுக்காரர். இருவரும், அமைதி விரும்புபவர்—என்பால் அன்பு கொண்டவர்கள். அரசியல்பற்றி அதிகமாகப் பேசுபவர்கள் அல்ல—விஷயம் தெரியாதவர்களுமல்ல.
சிறையிலே தம்பி, ஒருவன் எவ்வளவு காலம் நம்மோடு இருக்கப்போகிறவன் என்பதைப் பொறுத்தே பெரிதும் பழக்கம் ஏற்படும். சிறைபாஷையிலே, "தள்டா! அவன் போயிடுவான் பத்து நாள்லே! நம்ம கதையைச் சொல்லு, கிடக்கணுமே அடுத்த ஆடிவரைக்கும்" என்று கூறுவார்கள்.
என் 'கதை' இருக்கிறதே, இது எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை! மற்றவர்களுக்கு எப்படித்